நிஜாமாபாத்: தெலுங்கானாவில் இருக்கும் நிஜாமாபாத் நகராட்சியில் வருவாய்த் துறை அதிகாரியாக இருக்கும் நரேந்தர் வீட்டில் லஞ்ச ஒழிப்புட்ஹ் துறையினர் வெள்ளிக்கிழமையன்று (ஆகஸ்ட் 9ஆம் தேதி) சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில் ரூ.6.07 கோடி மதிப்புள்ள தங்க நகைகள், பத்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
லஞ்சபணத்தில் அதிக சொத்துகளை நரேந்தர் சேர்த்துள்ளதாக புகார்கள் வந்ததையடுத்து நிஜாமாபாத் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ஆக்ஸ்ட் 9ஆம் தேதி அதிகாலை அவரது வீட்டிலும் நிஜாமாபாத் நகராட்சி அலுவலகத்திலும் நரேந்தரின் உறவினர்கள் வீடுகளிலும் ஒரேநேரத்தில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, வருவாய்க்கு அதிகமாக அவர் சொத்துகள் சேர்த்துள்ள விவரம் தெரிய வந்தது.
ரூ.2.93 கோடி ரொக்கம், ரூ.1.98 கோடி மதிப்புள்ள 17 வீட்டு மனைப்பட்டாக்கள், நரேந்தருடைய மனைவியின் வங்கி கணக்கில் ரூ.1.10 கோடி, வங்கி பாதுகாப்பு பெட்டகத்தில் இருந்த தங்க நகைகள் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக நரேந்தரை லஞ்ச ஒழிப்புட்ஹ்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருவதாக நிஜாமாபாத் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் காவல் கண்காணிப்பாளர் சேகர் கவுட் தெரிவித்தார்.