புதுடெல்லி: திகார் சிறையில் உதவி கண்காணிப்பாளராகப் பணியாற்றி வரும் தீபக் சர்மா, பிறந்த நாள் விழா ஒன்றில் தன் கைத்துப்பாக்கியால் சுட்டபடி நடனம் ஆடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விழாவில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நடித்த ’கல் நாயக்’ படத்தில் இருந்து பிரபலமான ’கல் நாயக் ஹூன் மைன்’ பாடலுக்கு தன் கைத்துப்பாக்கியுடன் தீபக் சர்மா நடனமாடியுள்ளார்.
இந்த சம்பவம் கோண்டா பகுதியில் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் இந்த விழாவின்போது பலமுறை வானை நோக்கி துப்பாக்கியால் அவர் சுட்டதாக இந்தச் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டுகள் காவல்துறையால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. எனினும், இந்தக் காணொளி இணையத்தில் பரவலானதால், தீபக் சர்மா சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்தக் காணொளியைப் பகிர்ந்து வரும் பலரும் அவருக்கு எதிரான பதிவுகளைப் பதிவிட்டு வருவதுடன் கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.
ரூபாய் 200 கோடி மோசடி வழக்கின் பின்னணியில் மூளையாகச் செயல்பட்ட சுகேஷ் சந்திரசேகரின் வீடுகளில் சோதனை நடத்தியதில் பெரும் பங்குவகித்தவர் இந்த தீபக் சர்மா. தவிர, உடற்பயிற்சியில் கவனம் செலுத்துவதிலும் பிரபலமானவராக அறியப்படுகிறார். இவரை, இன்ஸ்டகிராமில் 4.4 லட்சத்திற்கும் அதிகமானோர் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


