சென்னை: சென்னையில் வரும் ஆக., 30, 31, செப்., 1 ஆகிய நாள்களில் நடக்கவிருக்கும் ஃபார்முலா கார் பந்தயத்தை எதிர்த்து, அதிமு.க உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமென்று கோரியுள்ளது.
சென்னையில், மேற்குறிப்பிட்ட தேதிகளில் ‘ஃபார்முலா ரேஸிங் சர்க்யூட் எஃப் 4’ எனப்படும், கார் பந்தயம் நடக்க உள்ளது. சென்னை தீவுத்திடலில் துவங்கி 3.5 கி.மீ., துாரத்தை தாண்டி, மீண்டும் தீவுத்திடலுக்கு வரும் வகையில் இந்தப் பந்தயம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தடத்தில், 19 திருப்புமுனைகள், பல இரட்டை வளைவுகள், மேல்நோக்கிய சரிவுப் பாதைகள் உள்ளிட்டவற்றைக் கடந்து செல்ல வேண்டும். இதில் வாகனங்கள் 230 முதல் 250 கி.மீ. வேகத்தில் செல்லும் என்று கூறப்படுகிறது.
இதற்கு அரசியல் கட்சியினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு தோன்றியுள்ளது. ஆடம்பர செலவு செய்து கார் பந்தயம் நடத்துவதால் விளையாட்டுத்துறை உத்வேகம் பெறுமா என நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் விமர்சித்துள்ளனர்.
இந்நிலையில், கார் பந்தயத்தை எதிர்த்து, அதிமுக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அவசர வழக்காக விசாரிக்கவும் கேட்டுக்கொண்டுள்ளது. இந்த வழக்கு விசாரணை விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

