புதுடெல்லி: அதிக விளைச்சல் தரும் 109 பயிர் வகைகளை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் ஞாயிற்றுக்கிழமை அறிமுகம் செய்ததாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூலை 23ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மத்திய வரவு செலவு திட்டத்தில் அதிக விளைச்சல் தரும் 109 பயிர் வகைகள் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, பருவநிலைக்கு ஏற்ற, அதிக விளைச்சல் தரக்கூடிய 109 பயிர் வகைகள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
சிறுதானியங்கள், தீவன பயிர்கள், எண்ணெய் வித்துக்கள்,பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி, நார்ச்சத்து உள்ளிட்ட தானியங்களின் விதைகள் வெளியிடப்பட்டதாகக் கூறப்பட்டது.
பல்வேறு வகையான பழங்கள், காய்கறி பயிர்கள், கிழங்கு பயிர்கள், பூக்கள், மூலிகைப் பயிர்களுக்கான விதைகள் வெளியிடப்பட்டதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.
இந்த புதிய பயிர்கள் வறட்சியை தாங்கி வளரும் என்று தெரிவிக்கப்பட்டது.
புதிய பயிர் அறிமுக விழாவில் கல்ப சுவர்ணா, கல்ப சதாப்தி ஆகிய 2 புதிய தென்னை மரங்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதில் கல்ப சுவர்ணா உயரம் குறைந்த தென்னை மரம் ஆகும். இது இளநீர், கொப்பரை தேங்காய் உற்பத்திக்கு ஏற்றதாகும். ஆண்டுக்கு 130 இளநீர் தேங்காய்கள் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
கல்ப சதாப்தி என்ற உயரமான தென்னை மரம், பெரிய தேங்காய்வகையை சேர்ந்தது. இந்த மரத்தில் ஓராண்டில் 148 தேங்காய்கள் கிடைக்கும். இரு தென்னை மரங்களையும் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகாவில் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
பயிர் வகைகளை பிரதமர் மோடி புதுடெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியின் போது விவசாயிகள், விஞ்ஞானிகளுடன் மோடி கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நடவடிக்கைகள் விவசாயிகளுக்கு நல்ல வருமானத்தை உறுதி செய்வதுடன், அவர்களுக்கு தொழில்முனைவுக்கான புதிய வழிகளைத் திறக்கும் என்று மோடி கூறியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டன.

