புதுடெல்லி: ரஷ்யாவிடம் இருந்து ஒரே மாதத்தில் ஏறக்குறைய ரூ.23,500 கோடிக்கும் அதிகமான மதிப்பில் கச்சா எண்ணெய்யை இந்தியா இறக்குமதி செய்துள்ளது.
உக்ரேன்மீது ரஷ்யா போா் தொடுத்ததன் காரணமாக, ரஷ்யாமீது அமெரிக்கா கடந்த 2022ஆம் ஆண்டு இறுதியில் பல்வேறு பொருளியல் தடைகளை விதித்தது.
அதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் பலவும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டன.
அதனைத் தொடர்ந்து, இந்தியா போன்ற நாடுகளுக்குச் சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை விற்பனை செய்ய ரஷ்யா முன்வந்தது.
தொடக்கத்தில், இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷ்யாவின் பங்களிப்பு ஒரு விழுக்காடாக இருந்தது. தற்போது அது 40 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் ரஷ்யாவிடம் இருந்து ரூ.23,500 கோடி மதிப்பிலான கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
அதன் மூலம் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடாக ரஷ்யா உருவெடுத்துள்ளது.
ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் 47 விழுக்காடு சீனாவுக்கும் 37 விழுக்காடு இந்தியாவுக்கும் 7 விழுக்காடு ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் எஞ்சிய 6 விழுக்காடு துருக்கிக்கும் செல்கிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவும் சீனாவும் கச்சா எண்ணெய் மட்டுமல்லாது ரஷ்யாவில் இருந்து நிலக்கரியையும் அதிகம் இறக்குமதி செய்கின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் ரஷ்யாவின் மொத்த நிலக்கரி ஏற்றுமதியில் 45 விழுக்காடு சீனாவுக்குச் சென்றுள்ளது. இந்தியாவுக்கு 18 விழுக்காடு நிலக்கரி ஏற்றுமதி செய்யப்பட்டது.
இந்தியா தனது எரிபொருள் தேவையில் 85 விழுக்காட்டை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்து வருகிறது.
இந்தியாவும் ரஷ்யாவும் அதனதன் நாணயத்திலேயே வணிகம் புரிகின்றன. அமெரிக்க டாலரை அவை பயன்படுத்துவதில்லை.