மும்பை: மராட்டிய மாநிலத்தில் மும்பையை அடுத்துள்ள பிவண்டி பகுதியில் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரின் அந்தரங்க உறுப்பை தோசைக் கரண்டியால் இளம்பெண் தாக்கியிருக்கிறார்.
அப்பகுதியில் வசித்து வரும் 26 வயதுமிக்க இளம்பெண்ணின் பக்கத்து வீட்டில் அனில் சத்தியநாராயணன் என்பவர் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது பக்கத்து வீட்டு வாலிபர் மதுபோதையில் பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து பெண்ணிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றார் என்று தினத்தந்தி நாளேடு தகவல் வெளியிட்டிருந்தது.
வாலிபரின் செயலால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் வாலிபரிடமிருந்து தப்பித்து சமையல் அறைக்கு ஓடினார். அங்கும் பெண்ணை துரத்திச் சென்ற வாலிபர் தனது அந்தரங்க உறுப்பைக் காட்டி குறும்புச் செயல்களில் ஈடுபட்டார். அப்போது ஆவேசமடைந்த பெண், சமையல் அறையில் இருந்த தோசைக் கரண்டியை எடுத்து வாலிபரின் அந்தரங்க உறுப்பில் தாக்கினார்.
இதில் அவருக்குப் படுகாயம் ஏற்பட்டது.
வலி தாங்க முடியாமல் அலறித் துடித்த வாலிபர், ஓட்டம் பிடித்து மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு வாலிபருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே இளம்பெண் காவல்துறையில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வாலிபர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.