தாயின் இறுதிச் சடங்குக்காக பிச்சை எடுத்த சிறுமி

தாயின் இறுதிச் சடங்குக்காக பிச்சை எடுத்த சிறுமி

2 mins read
33d25d2e-e430-4da3-adfd-bdc68f3c68ee
தெலுங்கானாவில் நிகழ்ந்த துயரச் சம்பவம். - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், நிர்மல் மாவட்டம், பெல் தரோடாவைச் சேர்ந்த 15 வயது சிறுமியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார்.

இவரது தாயார் கூலி வேலை செய்து மகளைக் காப்பாற்றி வந்தார். தந்தை இறந்துவிட்டதால் சிறுமியின் குடும்பம் வறுமையால் வாடியது.

உறவினர்கள் யாரும் அவர்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை.

இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த சிறுமியின் தாய் நேற்று காலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தாய் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதை அறிந்த சிறுமி நிலைகுலைந்து காணப்பட்டார்.

தனக்கு இருந்த ஒரே ஆதரவும் தற்போது இல்லாததால் மன வேதனை அடைந்தார். தாயின் இறுதிச் சடங்குகளை செய்ய பணம் இல்லாததால் தாயின் பிணத்தருகே அழுதபடி உட்கார்ந்திருந்தார். பின்னர் தாயின் இறுதிச் சடங்கு செய்வதற்காக உதவி செய்யுமாறு கிராம மக்களிடம் கேட்டார். தரையில் துண்டை விரித்துவிட்டு சோகமாக உட்கார்ந்தார். இது காண்போரைக் கண்கலங்க வைத்தது. சிறுமியின் பரிதாப நிலைமையைக் கண்ட அப்பகுதி மக்கள் கண்கலங்கியபடி சிறிது சிறிதாக பண உதவி செய்தனர். இதனை சிலர் காணொளியாக எடுத்து சமூக ஊடகங்களில் பரப்பினர்.

இதைக் கண்ட தெலுங்கானா பாரத ராஷ்டிரிய முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவ் விரைவில் சிறுமிக்கு நிதியுதவி அளிப்பதாகவும் தற்போது அப்பகுதிக் கட்சி நிர்வாகியை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்து இறுதிச் சடங்கு செய்ய அனைத்து உதவியும் செய்ய உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து சிறுமியின் தாயின் இறுதிச் சடங்குக்காண அனைத்து ஏற்பாடுகளும் நடந்தன. பெற்றோரை இழந்து தவிக்கும் சிறுமிக்கு அரசாங்கம் உதவி செய்யவேண்டும் எனப் பலரும் சமூக ஊடகங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்