புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்ற லாப நோக்கமற்ற அமைப்பின் ஆய்வு அறிக்கை அண்மையில் வெளியானது.
அதில் 2026ஆம் ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களுக்கு இடையில், பருவநிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் 117 மில்லியன் மக்கள் 30 நாள்களுக்கும் மேலாக ஆபத்தான வெப்பத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் உள்ள 59 நகரங்களை உள்ளடக்கிய இந்த ஆய்வில், ஸ்ரீநகரில் வெப்ப ஆபத்து நாள்கள் அதிகபட்சமாக 53 ஆகப் பதிவானது.
அதைத் தொடர்ந்து சென்னை 40 நாள்களையும், ராஜ்கோட், அமிர்தசரஸ் தலா 29 நாள்களையும், லக்னோ 27 நாள்களையும் பதிவு செய்துள்ளன.
மனிதர்களால் ஏற்பட்ட பருவநிலை மாற்றம் காரணமாகக் கூடுதலாக ஏற்படும் ஆபத்தான வெப்ப நாள்களும் ஆய்வில் கணக்கிடப்பட்டது.
அதில் சென்னை 30 நாள்களைப் பதிவு செய்துள்ளது. ஸ்ரீநகர், திருச்சிராப்பள்ளி தலா 29 நாள்களையும், மதுரை 23 நாள்களையும் பதிவு செய்துள்ளன.
பருவநிலை மாற்றத்தால் குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கப்பட்டு, வெப்பம் இருமடங்கு அதிகமாகப் பதிவான நாள்களின் எண்ணிக்கை மும்பையில் அதிகபட்சமாக 86 ஆக உள்ளது.
உள்ளூர்ப் பகுதிகளில் 1991-2020 காலகட்டத்தில் பதிவான வெப்பநிலையை விட 90 விழுக்காடு அதிகமாக உள்ள நாள்களைக் கொண்டு இந்த ஆபத்தான வெப்ப நாள்கள் கணிக்கப்பட்டன.
இந்த எல்லையில்தான் வெப்பத்தால் ஏற்படும் சுகாதார அபாயங்கள் அதிகரிக்கத் தொடங்குகின்றன.
ஜூன், ஆகஸ்ட் காலகட்டத்தில் இந்தியாவில் சராசரியாக ஒருவர் 39 நாள்கள் பருவநிலை மாற்றத்தின் கடுமையான தாக்கத்தை உணர்ந்துள்ளார்.
உலகளவில், 1.5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் குறைந்தது ஒரு மாதம் இத்தகைய ஆபத்தான வெப்பத்தை எதிர்கொண்டனர்.
பிரான்ஸ், ரோம் ஆகியவை மிகவும் வெப்பமான பகுதிகளாக இருந்தன. மோசமான வெப்பம் பதிவான பத்து நாடுகளில் ஏழு நாடுகள் ஐரோப்பாவில் உள்ளன.
ஆசியாவில்தான் அதிக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு அடுத்தபடியாகச் சீனாவில் 94 மில்லியன் மக்களும், இந்தோனேசியாவில் 83 மில்லியன் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
