சிங்கப்பூர் போல மும்பையில் குப்பை போடுவோர் மீது கடும் நடவடிக்கை

சிங்கப்பூர் போல மும்பையில் குப்பை போடுவோர் மீது கடும் நடவடிக்கை

2 mins read
கடுமையான சட்டம், புதிய கொள்கை உருவாக்கம், விழிப்புணர்வு இயக்கத்தை மேற்கொள்ள மாநில அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு
da23c285-5e09-4351-a435-6191335f68d3
பெருநகரப் பகுதியான மும்பையில் தெருவெங்கும் குப்பைகள் மலைபோலக் குவிந்து கிடப்பதற்கு அம்மாநிலத்தின் மாநகராட்சியை நீதிமன்றம் கடுமையாகச் சாடியது. - படம்: இந்துஸ்தான் டைம்ஸ்
multi-img1 of 2

மும்பை: மும்பையிலும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குப்பைப் பிரச்சினையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களை இயற்றுமாறு மகாராஷ்டிர மாநில அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை (செப்டம்பர் 10) உத்தரவிட்டுள்ளது.

பொது இடங்களில் குப்பைகளைக் கொட்டிச் சுகாதாரத்தைச் சீர்குலைக்கும் பொறுப்பற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில் மாநில அளவிலான புதிய கொள்கையை உருவாக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மும்பையில் தெருவெங்கும் குப்பைகள் மலைபோலக் குவிந்து கிடப்பதற்கு அம்மாநிலத்தின் மாநகராட்சியை நீதிபதிகள் கிரிஷ் குல்கர்னி, நீலா கோகலே ஆகியோர் அடங்கிய அமர்வு கடுமையாகச் சாடியது.

“நகரம் முழுதும் குப்பைக்கூளமாகத் காட்சியளிக்கிறது. நிர்வாக இயந்திரம் செயலிழந்துவிட்டதா? இதற்கு மேலும் கைகட்டி வேடிக்கை பார்க்க முடியாது,” என்று நீதிபதிகள் தங்களின் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தனர்.

ஒவ்வொரு பிரிவின் தூய்மைக்கு அப்பிரிவின் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும். கடமை தவறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை பாயும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சி ஆணையர் உடனடியாக களத்தில் இறங்கி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

பொது இடங்களில் குப்பை போடுவோருக்கு எதிராகக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட வேண்டும். தேவைப்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.

அதேவேளையில், தூய்மை விழிப்புணர்வைப் பரப்பச் சமூக ஊடக பிரபலங்களைப் பயன்படுத்தலாம் என்றும் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

வழக்கு விசாரணை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்