புதுடெல்லி: உலக அமைதி, நிலைத்தன்மை, இயற்கை வளங்கள் ஆகியவற்றுக்கு இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெறுவது மிகவும் முக்கியம் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
புதிய ஜப்பானியப் பிரதமராகப் பொறுப்பேற்றிருக்கும் சானே தகாய்ச்சிக்கு வாழ்த்து தெரிவித்த திரு மோடி எக்ஸ் தளத்தில் இவ்வாறு பதிவிட்டார்.
“(பிரதமராக) பொறுப்பேற்றதற்கு அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன். மேலும், இந்தியா-ஜப்பான் சிறப்பு உத்திபூர்வ, உலகளாவிய பங்காளித்துவத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பற்றிய எங்களின் ஒருமித்த இலக்கைப் பற்றிப் பகிர்ந்துகொண்டோம். பொருளியல் பாதுகாப்பு, தற்காப்பு ஒத்துழைப்பு, திறனாளர் பரிமாற்றம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தியா-ஜப்பான் தொடர்புகள் மேலும் வலுப்பெறுவது உலக அமைதி, நிலைத்தன்மை, செழிப்பு ஆகியவற்றுக்கு மிக முக்கியம் என்றும் நாங்கள் ஒப்புக்கொண்டோம்,” என்றார் திரு மோடி. தொலைபேசியில் திருவாட்டி சானே தகாய்ச்சியுடன் இடம்பெற்ற உரையாடலைப் பற்றி அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
திருவாட்டி சானே தகாய்ச்சி, ஜப்பானின் முதல் பெண் பிரதமராவார். இந்தியா, தென்கொரியா, பிலிப்பீன்ஸ் போன்ற நாடுகளுடன் மேலும் ஆழமான பலதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்தப்போவதாக அவர் கூறியிருந்தார். இடையூறு இல்லாத, தடையற்ற இந்தோ பசிபிக் வட்டாரத்தை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லப்போவதாக அவர் சொன்னார்.
அவ்வட்டாரத்தில் சீனா அதன் ராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ள நிலையில் திருவாட்டி சானே தகாய்ச்சி இவ்வாறு கூறினார்.


