மதுரை: வீட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிபொருள்கள் வெடித்ததில் கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
அந்தச் சம்பவம் மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருங்காலக்குடி கிராமத்தில் நிகழ்ந்தது.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த யோகவாணி, 42, என்பவரின் வீட்டில் தீபாவளிக்காக முன்கூட்டியே பட்டாசு வெடிகள் வாங்கி வைத்து இருந்தாகக் கூறப்படுகிறது.
அந்த வெடிகள் திடீரென்று வெடித்து விபத்து ஏற்பட்டது. அப்போது வீட்டிலிருந்த யோகவாணி, அவரது மகன் லோகேஷ், 20, அவரது நண்பர் மனோஜ், 20, ஆகிய மூவரும் படுகாயமடைந்தனர்.
சிகிச்சைக்காக அந்த மூவரும் மேலூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த கல்லூரி மாணவர் மனோஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தாய் யோகவாணி, அவரது மகன் லோகேஷ் ஆகிய இருவரும் படுகாயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர்.
லோகேஷ், மனோஜ் இருவரும் மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தனர்.
இது குறித்து தகவலறிந்த மேலூர் காவல்துறை உதவி கண்காணிப்பாளர் சிவகுமார் தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்துக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். விபத்து எப்படி நடந்தது என்பது பற்றி கொட்டாம்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
