ராஞ்சி: அரசுத் தேர்வாணையம் நடத்திய தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கூறி ஜார்க்கண்ட் மாநிலத்தில் போராட்டம் வெடித்துள்ளது. அங்குள்ள மாணவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்துக்குக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவு அளித்துள்ள நிலையில், அம்மாநிலத் தலைநகர் ராஞ்சியில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
ஜார்க்கண்டில் அண்மையில் நடைபெற்ற அரசு ஊழியர் முதல்நிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும், வினாத்தாள் கசிவு, மாநிலத்தின் அரசு ஊழியர் தேர்வுமுறையில் மாற்றம் வேண்டும் ஆகியன மாணவர்களின் முதன்மைக் கோரிக்கைகளாகும்.
மேலும், அண்மையில் நடந்த அரசுத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டிய மாணவர்கள், சிபிஐ விசாரணை கோரி ராஞ்சி நகரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள பெரிய திடலில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தைத் தேவேந்திரநாத் மஹதோ துவங்கி வைத்தார்.
அண்மையில் நடந்த அரசுத்தேர்வில் முறைகேடுகள் நடந்திருப்பதை அடுத்து, ஜூலை 5ஆம் தேதி மாணவர்கள் போராட்டம் தொடங்கியதாகக் குறிப்பிட்டுள்ள திரு மஹதோ, ஜூலை 8ஆம் தேதி உருவப்பொம்மை எரிப்புப் போராட்டத்தை நடத்தியதாகக் கூறியுள்ளார்.
பின்னர் ஜார்க்கண்ட் முதல்வரிடம் மனு அளித்த பிறகும் உரிய தீர்வு காணப்படவில்லை என்று சுட்டிக்காட்டிய திரு மஹதோ, முதல்வர் ஹேமந்த் சோரனிடம் சமர்ப்பித்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடரப்போவதாக அவர் கூறினார்.
“மாணவர்கள் இறுதிவரை போராட்ட உணர்வுடன் களத்தில் இருப்பதை உறுதிசெய்ய உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.
“இந்தப் போராட்டத்தின் அனைத்து விதிகளையும் நான் பின்பற்றி, அரசாங்கத்தை மண்டியிடச் செய்வேன். குற்றஞ்சாட்டப்பட்ட அனைவருக்கும் கடுமையான தண்டனை கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்,” என்றும் திரு மஹதோ சூளுரைத்தார்.
இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேசியதாகவும் அவர்களின் கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கூறினார்.

