கலவர பூமியில் ஆய்வு: மணிப்பூருக்குச் செல்லும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு

2 mins read
90392fbc-f474-4447-b438-d7c1d3e7751d
கலவரத்திற்கும் உயிருடற்சேதத்திற்கும் பொறுப்பேற்று முதல்வர் பைரோன் சிங் பதவியிலிருந்து விலகியதையடுத்து மணிப்பூரில் அதிபர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: கடந்த இரண்டு ஆண்டுகளாக கலவர பூமியாக மாறிவிட்ட மணிப்பூர் மாநிலத்துக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு பயணம் மேற்கொள்ள இருக்கிறது.

இந்தக் குழு தனது பயணத்தை மேற்கொள்ளும் என தேசிய சட்டச் சேவைகள் ஆணையம் தெரிவித்தது.

வடகிழக்கு இந்திய மாநிலமான மணிப்பூரில் இரு இனங்களுக்கு இடையேயான மோதல் கலவரமாக வெடித்தது. பல்வேறு வன்முறைச் சம்பவங்களில் இதுவரை 250க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர்.

ஏராளமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. அதனால், பலர் தங்கள் உடைமைகளையும் இழந்து நிவாரண முகாம்களில் தஞ்சம் புக வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகினர்.

கலவரத்திற்கும் உயிருடற்சேதத்திற்கும் பொறுப்பேற்று முதல்வர் பைரோன் சிங் பதவியிலிருந்து விலகினார். அதன் பின்னர் மணிப்பூரில் அதிபர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளது.

கலவரத்துக்கு மத்தியில், மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என வலியுறுத்தியும் சில போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பி.ஆர்.கவாய் உட்பட ஆறு பேர் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழு சனிக்கிழமை (மார்ச் 22) மணிப்பூர் சென்று, அங்குள்ள நிலைமையை ஆய்வு செய்யவுள்ளது.

அப்போது வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களையும் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளவர்களையும் நீதிபதிகள் சந்தித்துப் பேச உள்ளனர்.

நீதிபதிகளின் இந்தப் பயணமானது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான சட்ட, மனிதநேய உதவிகளின் தற்போதைய தேவையை வலியுறுத்தும் வகையில் இருக்கும் என தேசிய சட்ட சேவைகள் ஆணையம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளது.

மூன்று மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள புதிய சட்ட உதவி மையங்களையும் மாநிலம் முழுவதும் நடைபெறவுள்ள சட்ட சேவை, மருத்துவ முகாம்களையும் நீதிபதிகள் குழுவுக்குத் தலைமை ஏற்றுள்ள திரு கவாய் தொடங்கிவைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நீடிக்கும் வன்முறைகளுக்கு இடையே, பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சட்ட உதவி, ஆதரவை வழங்குவதில் மணிப்பூர் மாநிலச் சட்டச் சேவைகள் ஆணையத்துடன் தேசிய சட்டச் சேவைகள் ஆணையம் முக்கியப் பங்கு வகிக்கிறது,” என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்