கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரும் கன்னட அமைப்புகள்

கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கோரும் கன்னட அமைப்புகள்

படம்: என்டிடிவி

03 Nov 2026 - 4:17 pm

2 mins read

பெங்களூர்: கர்நாடகாவில் உள்ள முன்னணி தனியார், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் உள்ளூர் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்க வலியுறுத்தி கன்னட ஆதரவு அமைப்புகள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன.

கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பின் மாநிலத் தலைவர் நாராயண கவுடா தலைமையில், நவம்பர் 1ஆம் தேதி கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு அப்பிரசாரம் தொடங்கப்பட்டது.

கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பின் பல்வேறு குழுக்கள் பெங்களூரின் முக்கியத் தொழில்நுட்பப் பூங்காக்கள், நிறுவனங்களின் நிர்வாகத் தரப்பினரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றன.

இந்நிலையில், நிறுவனங்களுக்கு நேரடியாகச் செல்வதைத் தவிர்க்குமாறு துணை முதல்வர் டி.கே.சிவகுமார் விடுத்த வேண்டுகோளையும் மீறி இந்த நடவடிக்கை தொடர்கிறது. சட்ட ரீதியாகவும் பேச்சுவார்த்தை மூலமாகவும் மட்டுமே இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என அரசுத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போராட்டக்காரர்கள் அளித்துவரும் மனுவில், குறிப்பிட்ட அந்நிறுவனங்களின் மொத்தப் பணியாளர் எண்ணிக்கை, அதில் கன்னடர்களின் பங்களிப்பு, கடந்த மூன்று ஆண்டுகளுக்கான ஆட்சேர்ப்புத் தரவுகள், உள்ளூர் இளையர்களுக்கான பயிற்சித் திட்டங்கள் குறித்த முழுமையான விவரங்களை வழங்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இது எந்தவொரு நிறுவனத்தையும் இலக்கு வைக்கும் போராட்டம் அல்ல என்றும் தகவல்களைச் சேகரித்து அரசிடம் சமர்ப்பிக்கும் முயற்சியே இது என்றும் அவ்வமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகாவில் இயங்கிவரும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளூர் கன்னடர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்காமல், திட்டமிட்டுப் புறக்கணிப்பதாக அம்மாநில முதல்வர் டி.கே. சிவகுமார் அண்மையில் கூறியிருந்தார்.

கன்னடர்கள் புறக்கணிக்கப்படுவது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

கர்நாடகாவில் கன்னடர்களின் உரிமைகளுக்கும் கண்ணியத்திற்கும் வேலைவாய்ப்புகளுக்கும் எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதை மாநில அரசு அனுமதிக்காது என்றும் பெங்களூரின் வளர்ச்சிக்கு வித்திட்ட உள்ளூர் திறமையாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்