இந்திய ரயில்வேயின் ‘சூப்பர்’ செயலி விரைவில் அறிமுகம்

2 mins read
461715ef-db34-4c21-8787-b67e0a794a07
இந்திய ரயில்வே அமைச்சின் அனைத்துச் சேவைகளையும் பெற ‘சூப்பர்’ செயலி உதவும் என்று கூறப்படுகிறது. - படம்: இந்து தமிழ் திசை இணையத்தளம்

புதுடெல்லி: இந்தியாவில், ரயில் பயணிகளுக்கு மேம்பட்ட சேவை வழங்கும் நோக்கில் புதிய செயலி ஒன்று விரைவில் அறிமுகம் காணவிருக்கிறது.

ஐஆர்சிடிசி எனப்படும் இந்திய ரயில்வே உணவு, சுற்றுலாக் கழகத்தின் இணையத்தளம் வாயிலாகப் பயணிகள் தற்போது நுழைவுச்சீட்டுகளுக்கு முன்பதிவு செய்துவருகின்றனர்.

ஏறத்தாழ 85 விழுக்காட்டினர் இந்த இணையத்தளத்தைப் பயன்படுத்துகின்றனர்.

அதேபோல் சரக்கு ரயில் போக்குவரத்து, ரயில்வே சுற்றுலா ஆகியவற்றுக்குத் தனித்தனியாகச் செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் ரயில் போக்குவரத்தை உபயோகிப்பவர்கள், ஒருங்கிணைந்த சேவை பெறுவதில் சிரமம் ஏற்படுகிறது.

இதைத் தொடர்ந்து ரயில்வே அமைச்சின் அனைத்துச் சேவைகளையும் ஒரே செயலியில் பெறும் வகையில் ‘சூப்பர் ஆப்’ எனும் செயலி உருவாக்கப்படுகிறது. இந்தச் செயலி மூலம் பயணிகள் நுழைவுச்சீட்டுகளை விரைவாக முன்பதிவு செய்ய முடியும் என்று கூறப்பட்டுள்ளது.

அதேபோல், முன்பதிவு இல்லாத நுழைவுச்சீட்டுகளையும் பயணிகள் எளிதில் பெறமுடியும். மேலும், நுழைவுச்சீட்டை ரத்து செய்தால் அடுத்த 24 மணி நேரத்தில் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான வசதியும் இந்தச் செயலியில் இடம்பெறும்.

பிஎன்ஆர் எண் மூலம் நுழைவுச்சீட்டு உறுதியாகிவிட்டதா என்பதைச் சரிபார்த்தல், ரயில்கள் சென்றுகொண்டிருக்கும் இடத்தை நிகழ்நேரத்தில் பார்த்தல், ரயிலுக்குள் உணவு வாங்குதல் போன்ற பல்வேறு சேவைகளைப் பயணிகள் பெற முடியும்.

புதிய செயலி, இரண்டு பிரிவுகளைக் கொண்டிருக்கும். ஒன்று பயணிகளுக்கானது. இரண்டாவது சரக்கு வாடிக்கையாளர்களுக்கானது. அந்தப் பிரிவின்கீழ் சரக்கு அனுப்புவது, அதற்கான ஆவணங்களைச் சமர்ப்பிப்பது, கட்டணம் செலுத்துவது உள்ளிட்ட வசதிகள் செயலியில் இடம்பெறும்.

இந்த ஆண்டு இறுதியில் ‘சூப்பர்’ செயலி பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்