ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கு ஆதரவு: முதல்வர் விஜய்யிடம் தமிழ் அமைப்புகள் வலியுறுத்து

ஈழத்தமிழர்களின் எதிர்காலத்திற்கு ஆதரவு: முதல்வர் விஜய்யிடம் தமிழ் அமைப்புகள் வலியுறுத்து

2 mins read
462fb1ee-ce64-4c79-906a-fa253a9214cb
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (இடமிருந்து நான்காமவர்) தலைமையில் இலங்கைத் தமிழ் அமைப்புகளின் பிரதிநிதிகள் முதல்வர் விஜய்யைச் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். - படம்: டெய்லி மிர்ரர்

சென்னை: இலங்கைத் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் தமிழ்நாட்டு முதலமைச்சர் ஜோசப் விஜய்யைச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.

தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜூலை 3) நிகழ்ந்த அந்தச் சந்திப்பில், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியப் பேரவைத் தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் அமைப்புகளைச் சேர்ந்த ஏழு பேர் கலந்துகொண்டனர்.

தமிழ் தேசிய முக்கள் முன்னணி, தமிழ் தேசியப் பசுமை இயக்கம், ஜனநாயகத் தமிழர் கட்சி போன்ற அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள்.

ஈழத் தமிழர்களின் எதிர்காலம் குறித்த ஒருமித்த அரசியல் நிலைப்பாட்டை வகுக்க, தமிழ்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒன்றை நடத்த முதல்வர் விஜய்யிடம் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அப்போது அவர்கள் அளித்தனர்.

இந்தியாவில் தங்கியுள்ள ஈழத் தமிழ் அகதிகளின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் அந்த மனுவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இலங்கையில் ஈழத் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை குறித்து அனைத்துலக அளவில், சுதந்திரமான முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் மனுவில் விளக்கப்பட்டுள்ளது.

இந்திய, ஈழத் தமிழ் மீனவர்களுக்கு இடையிலான விவகாரத்திற்கு விரைந்து நிரந்தரத் தீர்வுகாண முயற்சி எடுக்குமாறும் முதல்வர் விஜய்யிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மனுவில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் குறித்து இலங்கைப் பிரதிநிதிகள் முதல்வரிடம் விரிவாகக் கலந்துரையாடியதாகக் கூறப்பட்டது.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் கடந்த காலங்களிலும் தமிழக அரசுடனும் தமிழக அரசியல் கட்சிகளுடனும் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

2025 டிசம்பர் 18ஆம் தேதி அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலினை இலங்கைத் தமிழ்ப் பிரதிநிதிகள் நேரடியாகச் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகள் பற்றி வலியுறுத்தினர்.

அந்தத் கோரிக்கைகளுக்குத் தீர்வுகாணும் நோக்கில் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் அப்போது கடிதம் எழுதியிருந்தார்.

குறிப்புச் சொற்கள்