இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் தமிழர்களுக்கு உதவி: வடக்கு மாகாண ஆளுநர் உறுதி

2 mins read
49c6489f-d71f-4cae-b896-b4473a4b666b
இலங்கைத் தமிழர்கள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை, இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்க கோரிக்கை முன்வைக்கப்படும் என்றார் ஆளுநர் வேதநாயகன். - படம்: ஊடகம்

யாழ்ப்பாணம்: இந்தியாவில் இருந்து இலங்கை திரும்ப விரும்பும் ஈழத் தமிழர்களுக்கு உதவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது. இதற்கு அங்குள்ள வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன் தலைமை தாங்கினார்.

அப்போது இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிந்ததிலிருந்து இதுகுறித்து தொடர்ந்து பேசப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இந்தியாவில் இருந்து அவர்கள் அனைவரும் இலங்கைக்கு திரும்பவேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு என்றும் தற்போது தமிழகத்தில் முகாம்களில் உள்ளவர்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் திரு வேதநாயகன் கூறினார்.

யாரையும் வலுக்கட்டாயமாக நாட்டுக்கு அழைத்துவர முடியாது என்றாலும் நாடு திரும்ப விரும்புவோர்க்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ள உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் உறுதியளித்தார்.

அவர்கள் நாடு திரும்புவது தொடர்பில் இலங்கை, இந்திய அரசாங்கங்கள் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை உருவாக்குவதற்கான கோரிக்கையும் முன்வைக்கப்படும் என்றும் ஆளுநர் வேதநாயகன் மேலும் தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் இலங்கை வடக்கு மாகாணத்தில் உள்ள யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டதாக இந்து தமிழ் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபிறகும், தமிழகத்தில் உள்ள ஈழத்தமிழர்கள் நாடு திரும்புவதில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.

மாறாக, அந்நாட்டில் ஏற்பட்ட பொருளியல் நெருக்கடிக்குப் பின்னர் 2022 மார்ச் மாதத்திலிருந்து 300க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்து மண்டபத்தில் உள்ள முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது தமிழகத்தில் உள்ள 108 மறுவாழ்வு முகாம்களில் ஏறக்குறைய 60,000 இலங்கைத் தமிழர்கள் வசித்து வருவதாக தமிழக அரசுத்தரப்புத் தகவல்கள் கூறுகின்றன. மேலும், 40,000 பேர் முகாம்களுக்கு வெளியே காவல் நிலையங்களில் பதிவு செய்து வசிக்கின்றனர்.

ஒடிசாவின் மல்கன்கிரியில் உள்ள அகதி முகாமில் 60 இலங்கை தமிழர்கள் தங்கி உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்