புதுடெல்லி: மருத்துவர்கள்மீது தாக்குதல் நடத்தும் அரசியல்வாதிகளை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மருத்துவர்கள், மருத்துவமனைப் பணியாளர்கள் மீது அரசியல் கட்சியினர் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அதிகரித்துவருவது குறித்து அந்நீதிமன்றம் தனது கவலையையும் கடும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளது.
மருத்துவ ஊழியர்களைத் தாக்கும் அரசியல்வாதிகளை உடனடியாகக் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர்களை வெளியே சுதந்திரமாக நடமாட அனுமதிக்கக் கூடாது என்றும் அம்மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பல்கார் மாவட்டத்தில் உள்ள ‘ரிலீஃப்’ மருத்துவமனையில் நோயாளியை ‘டிஸ்சார்ஜ்’ செய்வது தொடர்பான தகராறில், சிவசேனா கட்சியின் நிர்வாகிகள் சிலர் நுழைந்து மருத்துவர்கள், வரவேற்பாளரைத் தாக்கியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான கண்காணிப்புக் கேமரா காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 17 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவு (ICU) வரை புகுந்து தாக்குதல் நடத்துவது சட்டம் ஒழுங்கிற்கு விடுக்கப்பட்ட சவால் எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், இதுபோன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது எவ்விதத் தயக்கமும் இன்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி உள்ளது.
இந்த விவகாரத்தில் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.


