புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தில், தமிழகப் பெண் தொடர்புள்ள வழக்கை, பெண் நீதிபதி ஒருவர் தமிழில் விசாரித்து தீர்ப்பு வழங்கிய சம்பவம், பல்வேறு தரப்பினரின் கவனத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம் பெண்ணைக் காதலித்து ஏமாற்றிய புகாரின் பேரில், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த நவீன் என்ற இளையர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில், அந்தப் பெண் தாய்மை அடைந்துள்ளது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நவீனுக்குப் பிணை கோரி, அவரது பெற்றோர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர்.
இந்த வழக்கை கர்நாடகாவைச் சேர்ந்த பெண் நீதிபதி நாகரத்னா விசாரித்தார். அவர் முழு விசாரணையையும் தமிழிலேயே நடத்தியது பலரையும் வியப்படையச் செய்தது.
சிறையில் இருந்த நவீனிடம் காணொளி மூலம் நீதிபதி நாகரத்னா பேசியபோது, திருமணத்துக்குப் பின் அந்தப் பெண்ணை நல்லவிதமாகப் பார்த்துக்கொள்வதாக அவர் தமிழில் தெரிவித்தார்.
இதையடுத்து, திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்ட நவீனுக்குப் பிணை வழங்கிய நீதிபதி நாகரத்னா, பெங்களூரில் தாம் வசித்தபோது அண்டை வீட்டில் இருந்த தமிழ்க் குடும்பத்தார்மூலம் தமிழில் பேசக் கற்றுக் கொண்டதாகக் கூறினார்.