13 ஆண்டுகளாக சுயநினைவற்ற நிலையில் இளையர்

கருணைக்கொலை வழக்கு: தீர்ப்பை ஒத்திவைத்தது உச்ச நீதிமன்றம்

2 mins read
c222504e-5beb-4d02-877a-a90c2472ad2b
ஹரிஷ் ராணா. - கோப்புப் படங்கள்

புதுடெல்லி: கடந்த 13 ஆண்டுகளாக ஆழ்ந்த மயக்க நிலையில் இருந்துவரும் இளையரை கருணைக்கொலை செய்ய அனுமதி கோரிய மனுமீதான தீர்ப்பை இந்திய உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

டெல்லியைச் சேர்ந்த ஹரிஷ் ராணா, 32, சண்டிகரில் உள்ள ஒரு கல்லூரியின் தங்குவிடுதியின் நான்காவது மாடியிலிருந்து கீழே விழுந்தார்.

2013ஆம் ஆண்டு நேர்ந்த அவ்விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலைக்குச் சென்றார் ஹரிஷ். அதன் பிறகு சுயநினைவின்றி படுத்த படுக்கையாகவே இருந்துவரும் தம் மகனின் துன்பத்தைப் பார்க்க முடியாமலும் அவரது சிகிச்சைக்கான போதிய நிதி வசதி இல்லாததாலும், மகனைத் தானாக இறக்க அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தை நாடியிருந்தார் திரு அசோக் ராணா.

மேலும், நீதிமன்றத்திற்கு ஹரிஷின் உடல் முழுவதும் படுக்கைப் புண்கள் அதிகமாக இருப்பதாகவும், அவர் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்புவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்பதை குறிப்பிடும் மருத்துவ அறிக்கையையும் அவர் தாக்கல் செய்திருந்தார்.

இதற்கிடையே, அந்த அறிக்கையைப் பார்த்த நீதிபதிகள், “அந்த இளையரை அதே நிலையில் தொடர்ந்து இருக்கச் செய்வது மனிதாபிமானமற்றது,” என்று தெரிவித்தனர். அவ்வழக்கு விசாரணையின்போது, வாதியின் தரப்பைக் கேட்டறிந்த நீதிபதிகள் தனது தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

மேலும், இவ்விவகாரத்தில் இனி கருணைக்கொலை (ஃபாசிவ் யூதனேஷியா) என்ற சொல்லைப் பயன்படுத்தப்போவதில்லை என்று சொன்ன நீதிபதிகள், ‘‘நீதிமன்றம் ஒவ்வொரு நாளும் பல வழக்குகளைத் தீர்த்து வைக்கின்றது. ஆனால், இதுபோன்ற சிக்கல்கள் மிகவும் நுட்பமானவை. நாமும் மனிதர்கள்தான். யார் வாழ வேண்டும் அல்லது யார் இறக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க நாங்கள் யார்?” என்றும் கேள்வி எழுப்பினர்.

இதன் தொடர்பில் கருத்துரைத்த நீதிபதி ஜே.பி. பர்திவாலா, “உயிர் காக்கும் மருத்துவச் சிகிச்சையைத் திரும்பப் பெறுவது குறித்துப் பரிசீலிப்போம்,” என்று தெரிவித்தார்.

ஹரிஷின் உடல்நிலையை மாற்ற முடியாது என்று மருத்துவக் குழுவும் தெரிவித்துள்ள நிலையில், அவரது உயிர்காக்கும் ஆதரவு சிகிச்சையை நிறுத்த நீதிமன்றம் அனுமதி அளித்தால், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட முதல் கருணைக்கொலை வழக்காக இது அமையும்.

குறிப்புச் சொற்கள்