இந்தியாவில் மணம் முடித்தோர் வெளிநாட்டில் மணவிலக்குப் பெறமுடியாது: உச்ச நீதிமன்றம்

இந்தியாவில் மணம் முடித்தோர் வெளிநாட்டில் மணவிலக்குப் பெறமுடியாது: உச்ச நீதிமன்றம்

மறுமணம் செய்தால் குற்றவியல் நடவடிக்கை
கோப்புப் படம்: தி இந்து

12 Nov 2026 - 6:55 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் திருமணம் செய்துகொண்ட தம்பதி, வெளிநாடுகளில் மணவிலக்குப் பெற்றாலும், இந்தியச் சட்டப்படி அந்தத் திருமணம் ரத்து செய்யப்பட்டதாக ஆகாது என இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வெளிநாடுகளில் மணவிலக்குப் பெற்றுவிட்டு இரண்டாவது திருமணம் செய்துகொண்டால், இந்தியச் சட்டப்படி முதல் திருமணம் ரத்து செய்யப்படாத நிலையில் மறுமணம் செய்த ‘இருதார மணம்’ (Bigamy) எனும் குற்றமாகவே கருதப்படும் என நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

மனைவியின் கடும் எதிர்ப்பையும் மீறி, ‘திருமண உறவு மீள முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்டது’ என்ற காரணத்தைக் காட்டி வெளிநாட்டு நீதிமன்றத்தில் மணவிலக்குப் பெற்று மறுமணம் செய்துகொண்ட ஒருவருக்கு எதிரான வழக்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, ஸ்ரீ சந்திரசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

அப்போது, “இந்தியத் திருமணச் சட்டத்தில் ‘திருமண உறவு மீள முடியாத அளவுக்குச் சிதைந்துவிட்டது’ என்பது மணவிலக்குக்கான சட்டபூர்வ காரணமாக அங்கீகரிக்கப்படவில்லை. எனவே, இந்தியச் சட்டத்திற்கு முரணாக வெளிநாட்டு நீதிமன்றம் அளித்த மணவிலக்கு உத்தரவு, உரிமையியல் நடைமுறைச் சட்ட விதிகளை மீறுவதால் அது செல்லாது,” என நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

மறுமணம் செய்தபோது தான் பிரிட்டிஷ் குடிமகனாக இருந்ததாகவும், வெளிநாட்டில் திருமணம் நடந்ததால் இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் தன் மீது நடவடிக்கை எடுக்க முடியாது என்றும் அந்த ஆடவர் வாதிட்டார்.

இதனை நிராகரித்த நீதிபதிகள், “இந்தியாவில் இந்து முறைப்படி முதல் திருமணம் நடைபெற்றதால், பின்னாளில் வாழ்க்கைத் துணையின் குடியுரிமை மாறிவிட்டாலோ அல்லது வெளிநாட்டில் மறுமணம் நடந்தாலோ இந்தியச் சட்டத்தின் பின்விளைவுகளிலிருந்து தப்பிக்க முடியாது,” என்றுகூறி அவர்மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டனர்.

இந்திய திருமணச் சட்டப்படி மணம் முடித்தவர்களுக்கு, வெளிநாட்டு நீதிமன்றங்கள் அளிக்கும் விவாகரத்து, இந்தியாவில் செல்லுபடியாகாது என்று திட்டவட்டமாக நீதிமன்றம் தெளிவுபடுத்தியிருக்கிறது.

அதேவேளையில், ஆடவரின் பெற்றோர், இரண்டாவது மனைவிக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.

குறிப்புச் சொற்கள்