புதுடெல்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறிவிட்டது என உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணையின்போது தனி நபர்கள் செய்த தவறுக்காக அரசு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? என்று மத்திய அரசுத்தரப்புக்கு தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், நாட்டின் கூட்டாட்சி நடைமுறைகளை அமலாக்கத்துறை மீறுகிறது என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.
இதனிடையே, டாஸ்மாக் வழக்கு தொடர்பான அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக அரசுக்குச் சொந்தமான டாஸ்மாக் நிறுவனத்தில் சில வாரங்களுக்கு முன்பு அமலாக்கத்துறை அதிரடிச் சோதனை நடவடிக்கை மேற்கொண்டது. அதன் முடிவில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு அந்நிறுவனத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாக அறிக்கையும் வெளியிட்டது.
பின்னர், கடந்த 16ஆம் தேதியன்று அடுத்தக்கட்ட நடவடிக்கையாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதையடுத்து, அமலாக்கத்துறை நடவடிக்கையை சட்டவிரோதமானது என அறிவிக்கக் கோரி, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. எனினும் இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடைவிதிக்க மறுத்துவிட்டது.
இதையடுத்து, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது.
தொடர்புடைய செய்திகள்
இந்த மேல் முறையீட்டு மனுவை தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு விசாரித்தது.
இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர்.
நடப்பு திமுக ஆட்சியில் மது விலக்கு, ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பு வகித்த செந்தில் பாலாஜி, டாஸ்மாக் வழக்கில் முக்கிய குற்றவாளியாக அமலாக்கத்துறையால் குற்றம்சாட்டப்பட்டுள்ளார்.
விசாரணைக்குப் பின், 400 நாள்களுக்கும் மேலாக சிறையில் இருந்த அவருக்கு, பின்னர் பிணை கிடைத்தது.
டாஸ்மாக் வழக்கு விசாரணையால், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் திமுகவுக்குப் பின்னடைவு ஏற்படக்கூடும் என அரசியல் பார்வையாளர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்பட்டிருப்பதாக உச்ச நீதிமன்றம் காட்டத்துடன் தெரிவித்துள்ள கருத்து, திமுக தரப்புக்கு நிம்மதி அளித்துள்ளதாகக் கருதப்படுகிறது.