திருவனந்தபுரம்: விபத்தில் சிக்கிய இளையருக்கு போக்குவரத்து நிறைந்த சாலையில் வைத்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்களுக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
கேரள மாநிலம் கொச்சி அருகே உள்ள உதயம்பேரூர் என்கிற இடத்தில் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 23), 2 இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில், 40 வயதான வினு என்பவர் படுகாயமடைந்தார். விபத்தின்போது அவர் தனது வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்த நிலையில், சாலையில் சென்றவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.
அப்போது அவ்வழியே காரில் சென்று கொண்டிருந்த இதய அறுவை சிகிச்சை நிபுணரான மனூப்பு சூழ்நிலையைப் புரிந்துகொண்டு உடனடியாக தனது காரை நிறுத்தி உயிருக்குப் போராடிய வினுவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கத் தொடங்கினார்.
இவர் கோட்டயம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், அதிர்ஷ்டவசமாக கொச்சி கூட்டுறவு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவத் தம்பதியினரான தாமஸ் பீட்டர், திதியா ஆகியோரும் அவ்வழியே வந்தனர். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து அவர்களும் உதவிக்கரம் நீட்ட, உயிரைக் காப்பாற்றும் போராட்டம் வேகம் பெற்றது.
விபத்தின்போது வினுவின் நுரையீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருப்பதும் நுரையீரலுக்குள் மண் புகுந்ததால் அவர் மூச்சுத்திணறுவதும் தெரியவந்தது. உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலையில் மூன்று மருத்துவர்களும் துணிந்து முடிவெடுத்தனர்.
இதையடுத்து, விபத்து நடந்த சாலையின் நடுவே கைப்பேசி வெளிச்சத்தில் பிளேடு உள்ளிட்ட சிறிய உபகரணங்களைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை தொடங்கியது.
தொடர்புடைய செய்திகள்
வினுவின் கழுத்தில் சிறிதாகத் துளையிட்டு ஒரு ஸ்டிராவைப் பயன்படுத்தி அவர் மூச்சுவிட வசதி ஏற்படுத்தப்பட்டது.
சிகிச்சைக்குப் பின்னர் அவசர வாகனம் மூலம் கொச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வினு, தற்போது உடல்நலம் தேறி வருகிறார்.
வினுவுக்கு கைப்பேசி வெளிச்சத்தில் சாலையில் வைத்து சிகிச்சை அளித்து உயிரைக் காப்பாற்றிய மூன்று மருத்துவர்களுக்கும் பாராட்டுகள் குவிகின்றன.

