தீப்பிடித்த கப்பலில் மீட்பு நடவடிக்கை துரிதம்: இந்தியாவுக்கு சீனா நன்றி

தீப்பிடித்த கப்பலில் மீட்பு நடவடிக்கை துரிதம்: இந்தியாவுக்கு சீனா நன்றி

2 mins read
924557c2-337f-47ec-a8d2-2a16d501d8a8
கேரளாவுக்கு அருகே தீப்பிடித்துக்கொண்ட கப்பல். - படம்: ஏஎஃப்பி

திருவனந்தபுரம்: சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட கப்பலில் தீ மூண்ட சம்பவத்தில் மீட்பு நடவடிக்கையைத் துரிதமாக மேற்கொண்டதற்காக இந்தியாவிடம் சீனா நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட எம்வி வான் ஹை 503 (MV Wan Hai 503) கப்பலில் இந்தியாவின் கேரள மாநிலத்தின் கடற்கரைப் பகுதிக்கு அருகே திங்கட்கிழமை (ஜூன் 9) தீப்பிடித்துக்கொண்டது. அதிலிருந்த 22 பேரில் 14 பேர் சீனாவைச் சேர்ந்தவர்கள்.

அதனையடுத்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் பேச்சாளர் யூ ஜிங், இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார் என்று என்டிடிவி ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

“ஜூன் ஒன்பதாம் தேதியன்று கேரளாவின் அழிக்கல் பகுதிக்கு 44 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் எம்வி வான் ஹை 503 கப்பலில் வெடிப்பு நேர்ந்தது. அதிலிருந்த 22 கப்பல் ஊழியர்களில் 14 பேர் சீனர்கள்; தைவானைச் சேர்ந்தோரும் அவர்களில் அடங்குவர். உடனடியாகச் செயல்பட்டு மிகச் சரியாக மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டதற்கு நாங்கள் இந்தியக் கடற்படைக்கும் மும்பை கடலோரக் காவற்படைக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்,” என்று யு ஜிங், எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

கப்பலில் 40 விழுக்காட்டுக்கும் மேலான தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஒன்மனோரமா ஊடகம் தெரிவித்துள்ளது. இந்தியக் கடலோரக் காவற்படை, இந்தியக் கடற்படை, இந்திய கப்பல் துறைக்கான பொது இயக்குநரகம் ஆகியவை வெளியிட்ட ஆக அண்மைய நிலவரத்துக்கான தகவல் அறிக்கையில் இவ்விவரம் இடம்பெற்றுள்ளது.

எம்வி வான் ஹை 503 கப்பல் மிதந்துகொண்டு இருக்கிறது; ஆனால், அதிலிருந்து தொடர்ந்து புகை வெளியாகிக்கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிக்கையின்படி ஆகக் கடைசி நிலவரப்படி அக்கப்பல் இந்தியக் கடற்கரைப் பகுதியிலிருந்து சுமார் 65 நாட்டிக்கல் மைல்கள் தொலைவில் இருக்கிறது.

தீ முழுமையாக அணைக்கப்பட்ட பிறகே கயிறு கட்டிக் கப்பலை அவ்விடத்திருந்து அகற்றும் முயற்சி மேற்கொள்ளப்படும்.

குறிப்புச் சொற்கள்