புதுடெல்லி: ஆக்ராவில் உள்ள நினைவுச்சின்னமான தாஜ்மகால் கடந்த ஐந்து ஆண்டுகளாக டிக்கெட் விற்பனை மூலம் அதிக வருமானம் ஈட்டி முதலிடத்தைப் பிடித்துள்ளதாக அரசாங்கத்தால் பகிரப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.
2020 முதல் 2024 வரையிலான ஐந்து ஆண்டுகளில் டிக்கெட் விற்பனை மூலம் அழகிய கட்டடமான தாஜ்மகால் அதிக வருவாய் ஈட்டியுள்ளது.
மத்திய கலாசார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் மாநிலங்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துபூர்வமாக அளித்த பதிலில் இந்த தகவலைப் பகிர்ந்துகொண்டார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் பல்வேறு நினைவுச்சின்னங்களுக்கான நுழைவுச் சீட்டுகளை ஆண்டு வாரியாக, நினைவுச்சின்னம் வாரியாக விற்றதன் மூலம் இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI) பெற்ற தொகை எவ்வளவு என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் நுழைவுச் சீட்டுகளை விற்றதன் மூலம் அதிக வருமானம் ஈட்டிய நினைவுச்சின்னங்கள் எவை என்றும் அவரிடம் கேட்கப்பட்டன.
அதற்கு அவர் அளித்த பதிலில், 2019-2020 முதல் நிதியாண்டு 2023-2024 வரையிலான நிதியாண்டுகளின் தரவை அட்டவணை வடிவத்தில் அமைச்சர் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, தாஜ்மகால் ஐந்து ஆண்டுகளிலும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
நிதியாண்டு 2019-2020ல் ஆக்ராவில் உள்ள ஆக்ரா கோட்டை, டெல்லியில் உள்ள குதுப் மினார் ஆகியவை இரண்டாவது, மூன்றாவது இடங்களில் இருந்தன.
நிதியாண்டு 2020-2021ல் தமிழ்நாட்டில் உள்ள மாமல்லபுரம் நினைவுச்சின்னம், கோனார்க்கில் உள்ள சூரிய கோயில் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் இருந்தன.
தொடர்புடைய செய்திகள்
நிதியாண்டு 2023-2024ல், டெல்லியின் குதுப் மினார், செங்கோட்டை இரண்டாவது, மூன்றாவது இடங்களில் இருந்ததாக அரசாங்கத் தரவுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
முழுவதும் பளிங்குக் கற்களாலான தாஜ்மகால் கட்டடம், ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது.
இது காதலின் சின்னமாக உலகப் புகழ்பெற்றது. ஏழு உலக அதிசயங்களின் புதிய பட்டியலில் தாஜ் மகாலும் சேர்க்கப்பட்டுள்ளது.
இக்கட்டடம் முகலாய மன்னனான ஷாஜகானால், இறந்து போன அவரது இளம் மனைவி மும்தாஜ் நினைவாக 22,000 பணியாட்களைக் கொண்டு 1631 முதல் 1654 ஆம் ஆண்டுக்கு இடையில் கட்டிமுடிக்கப்பட்டது.