ஓசூர்: கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதற்கு ஆட்சேபணை இல்லை என்று தமிழக அரசு ஒரு மாதத்திற்குள் தெரிவிக்க வேண்டும் என கன்னட சலுவளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் எச்சரித்துள்ளார்.
அப்படி செய்யாவிட்டால் கர்நாடகத்தில் இனி தமிழ்த் திரைப்படங்கள் ஓடாது என்று அவர் மிரட்டியுள்ளார். இதைத்தொடர்ந்து கர்நாடகம் - தமிழ்நாடு எல்லைகள் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துச் சேவை பிரச்சினை காரணமாக, மார்ச் 22ஆம் தேதி மாநிலம் தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை கன்னட அமைப்புகள் அறிவித்துள்ளன.
இந்நிலையில், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு தமிழக அரசு தொடர்ந்து மறுத்து வருவதைக் கண்டித்து, கன்னட சலுவளி கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்புகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை (மார்ச் 8) தமிழக - கர்நாடகா மாநில எல்லையான அத்திப்பள்ளி பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு, தமிழகத்துக்குள் நுழைய முயன்றனர். அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர்.
முன்னதாக, செய்தியாளர்களிடம் பேசிய நாகராஜ், “மேகதாது அணையைக் கட்ட எவ்வித ஆட்சேபனையும் இல்லை என ஒரு மாதத்திற்குள் தமிழக அரசு அறிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்காவிட்டால், முதல் போராட்டமாக கர்நாடக மாநிலத்தில் தமிழ்த் திரைப்படங்களை ஓட விடமாட்டோம்,” என்றார்.
“காவிரி நீர் கடலில் கலப்பதை தடுக்கவே நாங்கள் மேகதாது அணையைக் கட்டுகிறோம். காவிரி, மேகதாது, மாதாயி உள்ளிட்ட அணைகளுக்காக தமிழகம், மகாராஷ்டிரா மாநிலங்களை கண்டித்து மாநிலம் தழுவிய பந்த் நடக்கும்,” என்று அவர் கூறினார்.
கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டும் கர்நாடக அரசின் முடிவுக்கு தமிழக அரசு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது.
அரசு மேகதாதுவில் அணை கட்டினால் தமிழ்நாட்டின் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் எனக் கூறி தமிழ் நாடு அதனை தடுத்து வருகிறது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் விசாரணையில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ஏற்கெனவே காவிரி நதிநீர்ப் பங்கீடு பிரச்சினை இருமாநிலங்களுக்கும் இடையே நீடித்து வருகிறது. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டினால், இந்த பிரச்சினை மேலும் சீற்றம் அடையும்.
எனினும், கர்நாடக காங்கிரஸ் கட்சி, மேகதாது திட்டத்திற்காக 9 ஆயிரம் கோடியை ஒதுக்கி உள்ளதுடன் அதற்கான ஒப்புதல் பெறும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
மேகதாதுவில் அணை கட்டுவதற்கான ஆயத்த பணிகளை கர்நாடக அரசு முடித்துவிட்டதாக அம்மாநில அரசு அறிவித்து உள்ளது. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் எதிர்ப்பையும் கண்டனங்களையும் பதிவு செய்து வருகின்றனா்.