கேரள உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சீட்டில் தமிழ், கன்னடம்

1 mins read
2ee6a4fa-aa46-4856-ae2d-4f30b22bd231
கேரள மாநிலத்தில் டிசம்பர் 9, 11 என இருகட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது - படம்: கேரள மாநிலத் தேர்தல் ஆணையம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் மொழிச் சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் வாக்குச்சீட்டுகளிலும் வாக்களிப்பிற்கான அடையாளச் சீட்டுகளிலும் வேட்பாளர்களின் பெயர் மலையாளத்துடன் தமிழிலும் கன்னடத்திலும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மாநிலத் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுக்கவிருக்கிறது.

திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் தமிழ் பேசும் மக்கள் வசிக்கும் தொகுதிப்பிரிவுகளில் வேட்பாளர்களின் பெயர்களின் மலையாளத்திலும் தமிழிலும் இடம்பெற்றிருக்கும்.

அதுபோல, காசர்கோடு மாவட்டத்தில் கன்னட மக்கள் வசிக்கும் தொகுதிப்பிரிவுகளில், வேட்பாளர்களின் பெயர்கள் மலையாளத்தோடு கன்னடத்திலும் அச்சிடப்பட்டிருக்கும்.

கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் சார்ந்த பல்வேறு பணிகளில் 256,934 பேரை மாநிலத் தேர்தல் ஆணையம் ஈடுபடுத்தியுள்ளது. அங்கு 14 மாவட்டத் தேர்தல் அதிகாரிகளும் 28 துணை மாவட்டத் தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 9, 11 என இருகட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளது. டிசம்பர் 13ல் வாக்குகள் எண்ணப்படும்.

இந்நிலையில், பிறமொழி பேசும் மக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் பகுதிகளில் அவர்கள் மொழிகளையும் வாக்குச்சீட்டில் இடம்பெறச் செய்வது அனைவரையும் உள்ளடக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்