தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: 83% வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்

தமிழகச் சட்டமன்றத் தேர்தல்: 83% வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்

படம்: ஏஎஃப்பி

14 May 2026 - 5:29 pm

2 mins read

சென்னை: இவ்வாண்டு ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட 83 விழுக்காட்டு வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட 4,023 பேரில் 3,352 பேர் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் அளவிற்கு வாக்குகளைப் பெறவில்லை.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் இணையத்தளம் மூலமாக இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளன.

தமிழகத்திற்கு அடுத்ததாக மேற்கு வங்க மாநிலம் இரண்டாம் நிலையில் உள்ளது. அம்மாநிலச் சட்டமன்றத் தேர்தலில் 2,920 பேர் வேட்பாளர்களாகக் களமிறங்கிய நிலையில், அவர்களில் 78 விழுக்காட்டினர், அதாவது 2,298 பேர் வைப்புத்தொகையைப் பறிகொடுத்தனர்.

தேர்தலில் போட்டியிட விரும்பும் ஒருவர் தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்யும்போது, தேர்தல் அலுவலரிடம் ஒரு குறிப்பிட்ட தொகையை வைப்புத்தொகையாகச் செலுத்தவேண்டும். அந்த வேட்பாளர் தேர்தலில் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை, பதிவான மொத்த வாக்குகளில் ஆறில் ஒரு பங்கிற்கும் குறைவாக இருந்தால் அவரது வைப்புத்தொகை திரும்ப வழங்கப்படாது.

விழுக்காட்டு அடிப்படையில், அசாம் மாநிலத்தில்தான் குறைவான வேட்பாளர்கள், அதாவது 63% வேட்பாளர்கள் வைப்புத்தொகையை இழந்தனர். அங்குப் போட்டியிட்ட 722 பேரில் 267 பேர் மட்டுமே வைப்புத்தொகையைத் திரும்பப் பெற்றனர்.

கேரளச் சட்டமன்றத் தேர்தலில் களம்கண்ட 883 பேரில் 563 பேர், அதாவது 63.75 விழுக்காட்டினர் வைப்புத்தொகையைத் திரும்பப் பெறும் அளவிற்கு வாக்குகளைப் பெறவில்லை. அதுபோல், புதுச்சேரியில் 290 போட்டியிட்ட நிலையில் அவர்களில் 220 பேர் வைப்புத்தொகையை இழந்தனர்.

பெண்களே அதிகம்

தமிழகச் சட்டமன்ற வாக்களிப்பு விகிதத்தைப் பொறுத்தமட்டில், பெண்கள் ஆண்களை விஞ்சினர். பெண் வாக்காளர்களில் 86.2 விழுக்காட்டினரும் ஆண் வாக்காளர்களில் 83.77 விழுக்காட்டினரும் வாக்களித்தனர்.

கேரளத்திலும் பெண்களே முந்தினர். அங்கு 74.9% ஆண் வாக்காளர்களும் 81.17% பெண் வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர்.

குறிப்புச் சொற்கள்