தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழகத்தில் 42.7 டிகிரி வெப்பம்; ஓரிரு நாளில் இன்னும் அதிகமாகக் கொதிக்குமாம்

2 mins read
b29040ba-a562-4058-a911-7439218dc7b5
படம்: பிடிஐ -

தமிழகத்தில் அடுத்த சில நாள்களுக்கு வெப்பநிலை வழக்கத்தைக் காட்டிலும் 3 டிகிரி அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு நிலையம் எச்சரித்து உள்ளது.

அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் என்பதால் தமிழகத்தை வெப்பம் வாட்டி வதைக்கிறது.

பல ஊர்களில் அதிகபட்ச வெப்பநிலை பதிவாகி வருகிறது. செவ்வாய்க்கிழமை தமிழகம் முழுவதும் 18 நகரங்களில் 37.8 டிகிரி செல்சியசுக்கு மேல் (100 டிகிரி ஃபாரன்ஹீட்) பதிவானது.

சென்னை மீனம்பாக்கத்தில் அதிகபட்சமாக 42.7 டிகிரி வெப்பம் நிலவியது. அந்த வட்டாரத்தில் ஏறக்குறைய ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த அளவுக்கு அதிகம் வெப்பம் பதிவானது.

இதற்கு அடுத்தபடியாக வேலூரில் 42.18, நுங்கம்பாக்கத்தில் 41.8 டிகிரி வெப்பம் காணப்பட்டது.

இதுகுறித்து வானிலை முன்னறிவிப்பு வெளியிட்ட சென்னை வானிலை ஆய்வு நிலையம், அடுத்த ஒருசில நாள்களுக்கு வெப்பம் அதிகரிக்கும் என்றும் காற்றின் ஈரப்பதம் குறைவு காரணமாக இரவு நேரத்தில் அதிகப் புழுக்கம் நிலவும் என்றும் தெரிவித்தது.

மேலும், தமிழ்நாடு, புதுச்சேரியில் காரைக்கால் ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பம் இயல்பான நிலையிலிருந்து 2 அல்லது 3 டிகிரி அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அது குறிப்பிட்டு உள்ளது.

மேற்குத் திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இந்தப் பகுதிகளில் சனிக்கிழமை (மே 20) வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு நிலையம் கூறியுள்ளது.

அதிகளவு வெப்பத்தைத் தாங்க இயலாதவர்கள் மயக்கமடைதல் உள்பட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைச் சந்திக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்கள் வெயில் அடிக்கும் மதிய நேரத்தில் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அது பாதுகாப்பு எச்சரிக்கையை அறிவித்துள்ளது.

அண்மையில் வீசிய மோக்கா புயல், அதிக வெப்பத்தைக் கிளப்பிவிட்டுச் சென்றதாக ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன.

குறிப்புச் சொற்கள்