தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகத்திற்கு முதலிடம்

2 mins read
223d5c76-66b9-459b-866d-9987ecc41b6a
இந்திய அளவில் உறுப்பு தான நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்ட சிறந்த மாநிலமாக தமிழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவிலேயே உறுப்பு தான நடவடிக்கைகளில் திறம்பட செயல்பட்ட சிறந்த மாநிலமாகத் தமிழகம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது.

தேசிய உறுப்பு, திசு மாற்று சிகிச்சை அமைப்பு சார்பில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 2) டெல்லியில் நடந்த உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்வில், தமிழக உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலர் மருத்துவர் என்.கோபாலகிருஷ்ணனிடம் மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விருதை வழங்கினார்.

“தமிழகத்தில் 2023ல் 178 பேர் உறுப்பு தானம் செய்தனர். அவர்களிடமிருந்து பெற்ற உறுப்புகள் மூலமாக 1,000 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் மறுவாழ்வு பெற்றனர்,” என்று என்.கோபால கிருஷ்ணன் கூறினார்.

“2024ல் மூளைச்சாவு அடைந்த 268 பேரிடம் இருந்து பெறப்பட்ட உறுப்புகள் 1,500 பேருக்கு பொருத்தப்பட்டுள்ளன. தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் இருந்து 28 பேரின் உறுப்புகள் தானமாக பெறப்பட்டுள்ளது. அவர்களிடமிருந்து பெறப்பட்ட 100க்கும் மேற்பட்ட உறுப்புகள், தகுதியானவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ளன,” என்றார் அவர்.

“ஒருவர் மூளைச்சாவு அடையும்போது, சம்பந்தப்பட்ட நோயாளியின் உறவினர்களிடம் உறுப்பு தானத்துக்கு ஒப்புதல் பெறுவது, உறுப்புகளை முறையாக அகற்றி, பாதுகாப்பாக மற்ற நோயாளிகளுக்கு வெற்றிகரமாக பொருத்துவது உள்ளிட்ட நடைமுறைகளில் மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பல்வேறு சிக்கல்களும், சவால்களும் உள்ளன.

“அனைத்தையும் ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை உள்பட தமிழகத்தின் பல அரசு மருத்துவமனைகள் திறம்பட செய்ததால், இந்த சாதனை சாத்தியமாகியுள்ளது,” என்று திரு என்.கோபால கிருஷ்ணன் கூறினார்.

குறிப்புச் சொற்கள்