பெங்களூரு: கர்நாடக மாநில விவகாரத்தில் தமிழகம் தலையிடக் கூடாது என கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்திய கூட்டாட்சித் தத்துவத்தின்படி ஒரு மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு, நிர்வாக விவகாரத்தில் மற்றொரு மாநிலம் தலையிட உரிமை இல்லை என்றார்.
கர்நாடக மாநிலத்தின் காவிரி வனவிலங்குச் சரணாலயப் பகுதியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், குமார் ஆகிய மூன்று தமிழர்கள் வனத்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வேட்டை தடுப்பு நடவடிக்கையின்போது ஏற்பட்ட மோதலில் தற்காப்புக்காகவே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாகக் கர்நாடக வனத்துறை விளக்கமளித்துள்ளது.
ஆனால், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இக்கூற்றை முற்றிலுமாக மறுத்துள்ளனர். மேலும், தமிழக அரசியல் தலைவர்களும் இது திட்டமிடப்பட்டப் படுகொலை எனக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
வனத்துறையின் விளக்கம் ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழக முதல்வர் விஜய் தனது அதிகாரபூர்வ அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இக்கொடூரச் சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்குழு அமைக்கப்பட்டு, குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி மற்றும் பிற கட்சித் தலைவர்களும் இச்சம்பவத்தைக் கண்டித்து, நடுநிலையான நீதி விசாரணை அல்லது சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலச் சட்டம்-ஒழுங்கை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது அம்மாநில அதிகாரிகளுக்கும் ஆட்சியாளர்களுக்கும் நன்றாகத் தெரியும் என முதல்வர் டி.கே. சிவகுமார் தெரிவித்துள்ளார்.
“தமிழகத் தலைவர்கள் தங்கள் வேலையைப் பார்க்கட்டும். எங்கள் பணிகளில் குறுக்கிட வேண்டாம்,” என்று அவர் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, துப்பாக்கிச்சூடு குறித்து, நடுநிலையான நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் விசாரணையில் வனத்துறை அதிகாரிகள் தவறு செய்தது நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கர்நாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
காவல்துறையினர் குவிப்பு
இருமாநில எல்லைப் பகுதிக் கிராமங்களில் பதற்றம் நிலவி வருகிறது. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்லையோரக் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும், தொடர் போராட்டங்களை நடத்தவும் தயாராகி வருகின்றனர்.
இதனால் பதற்றம் நிலவுவதையடுத்து, அப்பகுதிகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.


