ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ), ஜிஎஸ்எல்வி எப்-15 என்ற தனது நூறாவது உந்துகணையை ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி நிலையத்திலிருந்து புதன்கிழமை (ஜனவரி 29) விண்ணில் வெற்றிகரமாக செலுத்தி வரலாறு படைத்துள்ளது.
இஸ்ரோவின் புதிய தலைவராக அண்மையில் பதவியேற்ற தமிழகத்தைச் சேர்ந்த வி.நாராயணனின் தலைமையில் இந்த உந்துகணை ஏவப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இஸ்ரோ தலைவர் நாராயணன், “விண்வெளி ஆய்வுத் துறையில் புதிய மைல்கல் சாதனையை இஸ்ரோ எட்டியுள்ளது. இதுவரை 100 உந்துகணை திட்டங்களை சாத்தியமாக்கிய அனைவருக்கும் பாராட்டுகள்.
“மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம், சந்திரயான் 4, 5, செவ்வாய்க் கோளில் தரையிறங்கும் திட்டம், வெள்ளிக் கோள் ஆய்வுத் திட்டம் என ஏற்கெனவே ஒப்புதல் பெறப்பட்ட பல்வேறு திட்டங்களை அடுத்தடுத்து செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
“ககன்யான் திட்டத்தின்கீழ் ஆளில்லா விண்கலங்களை அனுப்பி பரிசோதிக்கும் மூன்று திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.
“அத்துடன், குலசேகரப்பட்டினம் ஏவுதளமும் அடுத்த ஈராண்டுகளுக்குள் முழுமையாக பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படும்.
“நூறு உந்துகணைகளை ஏவுவதற்கு 46 ஆண்டுகள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தற்போது போதிய கட்டமைப்புடன் பல்வேறு வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 100 உந்துகணைகளை ஏவுவதற்கு வாய்ப்புள்ளது,” என்று கூறியுள்ளார்.

