புதுடெல்லி: இவ்வாண்டு இறுதிக்குள் 20,000 மக்கள் மருந்தகங்களைத் திறக்க இந்திய அரசு இலக்கு கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார்.
மார்ச் 1 முதல் 7ஆம் தேதிவரை மக்கள் மருந்தக வாரம் கொண்டாடப்படுகிறது. அதனையொட்டி, மக்கள் மருந்தக வாகனங்களின் பயணத்தைத் திரு நட்டா கொடியசைத்துத் தொடங்கிவைத்தார்.
அவ்வாகனங்கள் தலைநகர் புதுடெல்லியை ஒட்டிய பகுதிகளுக்குச் சென்று, மக்கள் மருந்தகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும்.
“முதலில் 80 நிலையங்களுடன் தொடங்கப்பட்ட மக்கள் மருந்தகத் திட்டம், இப்போது 15,000 நிலையங்களாக உயர்ந்துள்ளது. அதனை இவ்வாண்டு இறுதிக்குள் 20,000ஆகவும், 2027க்குள் 25,000ஆகவும் உயர்த்த இலக்கு கொண்டுள்ளோம்,” என்று அமைச்சர் நட்டா தெரிவித்துள்ளார்.
மக்கள் மருந்தகம் தொடர்பில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், மக்கள் மருந்தக வாரத்தின்போது கருத்தரங்குகள், மருத்துவ முகாம்கள், மருத்துவ நடைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் கூறியுள்ளார்.
இதனிடையே, மக்கள் மருந்தகங்கள் மூலம் நடைபெறும் மருந்து விற்பனையின் மதிப்பு 2024-25 நிதியாண்டில் ரூ.2,000 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுவதாக மருந்துகள், மருத்துவக் கருவிகள் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி ரவி ததீச் தெரிவித்துள்ளார்.
தரமிக்க பொதுவான மருந்துகளை மக்களுக்குக் கட்டுப்படியான விலையில் வழங்கும் நோக்கில் மக்கள் மருந்தகத் திட்டம் கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
அவற்றின்மூலம் ஏறத்தாழ 2,300 மருந்துகளும் மருத்துவக் கருவிகளும் விற்கப்படுகிறது. தனியார் மருந்தகங்களைக் காட்டிலும் மக்கள் மருந்தகங்களில் 50-80% குறைவான விலையில் அவை விற்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது.