எழுத்தறிவற்ற ஐந்து முதல் எட்டுப் பேருக்கு கற்பிக்க பயிற்சி ஆசிரியர்களுக்கு இலக்கு

எழுத்தறிவற்ற ஐந்து முதல் எட்டுப் பேருக்கு கற்பிக்க பயிற்சி ஆசிரியர்களுக்கு இலக்கு

கோப்புப்படம்: டைம்ஸ்ஆப்இந்தியா

02 Nov 2026 - 3:48 pm

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் உள்ள ஆசிரியர் கல்விக் கழகப் பயிற்சி ஆசிரியர்கள், எழுத்தறிவற்ற ஐந்து முதல் எட்டுப் பேருக்குக் கல்வி கற்பிக்க வேண்டும் என மத்தியக் கல்வி அமைச்சு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.

பயிற்சி பெறும் படிப்புக்கான கால அளவைப் பொறுத்து இந்த இலக்கு மாறுபடும்.

அவர்கள் கற்பிக்கும் நபர்கள் கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெற்று, அதிகாரபூர்வமாக எழுத்தறிவு பெற்றவர்களாகச் சான்றிதழ் பெற்ற பிறகே பயிற்சி ஆசிரியர்களுக்குத் தகுதிக்கான தர மதிப்பீடு வழங்கப்படும்.

‘உல்லாஸ்’ திட்டத்தின்கீழ் தேசிய ஆசிரியர் கல்விக் குழும அங்கீகாரம் பெற்ற அனைத்துக் கல்வி நிறுவனங்களின் பயிற்சி ஆசிரியர்களும் இதில் தன்னார்வ ஆசிரியர்களாகப் பங்கேற்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஈராண்டுப் படிப்பு பயில்வோர் குறைந்தது ஐந்து பேருக்கும், மூன்றாண்டுப் படிப்பு பயில்வோர் ஆறு பேருக்கும், நான்காண்டுப் படிப்பு பயில்வோர் எட்டுப் பேருக்கும் கற்பிக்க வேண்டும்.

அடிப்படை கல்வியறிவு இல்லாத 15 வயதுக்கு மேற்பட்டோருக்குக் கற்றல் வாய்ப்புகளை வழங்கும் நோக்கில் உல்லாஸ் திட்டம் 2022-23ஆம் நிதியாண்டில் தொடங்கப்பட்டது.

ஆசிரியர் கல்வியை ஓர் எழுத்தறிவு இயக்கமாக மாற்றுவதை புதிய வழிகாட்டுதல்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. மேலும் எழுத்தறிவற்ற நபர்களை அடையாளம் காண பள்ளிகள், உள்ளாட்சி அமைப்புகள், தொண்டு நிறுவனங்களுடன் கல்வி நிறுவனங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்
ஆசிரியர்பயிற்சிநடவடிக்கை