வரி உயர்த்தப்படலாம்: இந்தியாவை மிரட்டும் டிரம்ப்

2 mins read
2ac854e9-64d2-4fe9-905b-101eb883af01
“இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவாக நடந்துகொண்டது. மோடி ஒரு நல்ல மனிதர்,” என்றார் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப். - படம்: ராய்ட்டர்ஸ்
multi-img1 of 2

வாஷிங்டன்: இந்தியா, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யைக் கொள்முதல் செய்வது எனக்குப் பிடிக்கவில்லை என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியும் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ஃபுளோரிடாவில் இருந்து வாஷிங்டனுக்குச் செல்லும்போது விமானத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் திரு டிரம்ப் இதைத் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க செனட் சபை உறுப்பினர் லிண்ட்சே கிரஹாமும் இருந்தார்.

அந்தச் சந்திப்புக்கு இடையே பேசிய கிரஹாம், “அதிபர் டிரம்ப் இந்தியாமீது விதித்த கூடுதல் வரி மிக முக்கியமானது. அதனால்தான் இந்தியா ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதைக் கணிசமாகக் குறைத்துவிட்டது,” என்றார்.

இதைத் தொடர்ந்து பேசிய திரு டிரம்ப், ‘‘அமெரிக்கா விதித்துள்ள தடைகள், ரஷ்யாவைக் கடுமையாகப் பாதித்து வருகின்றன. இந்தியா அமெரிக்காவுக்கு ஆதரவாக நடந்துகொண்டது. மோடி ஒரு நல்ல மனிதர்,” என்றார் அவர்.

“ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதால் நான் மகிழ்ச்சியாக இல்லை என்பது மோடிக்குத் தெரியும். இந்தியா பெரிய அளவில் ஏற்றுமதி செய்கிறது. அமெரிக்கா இந்தியாமீது மிக விரைவாக வரிகளை உயர்த்த முடியும். அப்போது அது இந்தியாவை மிகவும் மோசமாகப் பாதிக்கும்,’’ எனத் திரு டிரம்ப் தெரிவித்தார்.

ஒரு மாதத்துக்கு முன்பு அமெரிக்காவுக்கான இந்தியத் தூதரின் வீட்டில் நடந்த சந்திப்பு குறித்து திரு கிரஹாம் நினைவு கூர்ந்தார்.

“ரஷ்யாவிடமிருந்து எவ்வளவு குறைவாகக் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்குகிறது என்பது குறித்து இந்திய அதிகாரிகள் தூதரிடம் பேச விரும்பினார்கள். வரியைக் குறைக்குமாறு அதிபரிடம் சொல்ல வேண்டும் என்றும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்,” என்றார் அவர்.

ரஷ்யா-உக்ரேன் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டு வர அதிபர் டிரம்ப் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகள்மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

“ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும் பொருள்களுக்கு 500% வரி விதிக்கப்பட வேண்டும்,’’ என்று கிரஹாம் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்