வாஷிங்டன்: இந்தியாவுக்கு வரி விதிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் அது மிகப்பெரிய நடவடிக்கை என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு வரி விதித்ததுதான், இந்திய, அமெரிக்க உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.
“இந்தியா தான் ரஷ்யாவின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இருந்தது. அவர்கள் ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதால் இந்தியா மீது 50% வரி விதித்தேன். அது எளிதான காரியம் அல்ல. இதனால்தான் இந்தியா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது,” என்றார் திரு டிரம்ப்.
தாம் நிறைய செய்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், ஏழு உலகளாவிய மோதலை தாம் தீர்த்து வைத்துள்ளதாகத் தெரிவித்தார். சில தீர்க்க முடியாத மோதலை தீர்த்து வைத்ததாகவும் அவர் கூறினார்.
“காங்கோ, ருவாண்டா இடையே 31 ஆண்டுகளாக நடந்து வந்த போரை தீர்த்து வைத்துள்ளேன். அந்தப் போரில் பல்லாயிரக்காணோர் கொல்லப்பட்டனர். இந்தியா, இனி ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்த வேண்டும்,” என்று அதிபர் டிரம்ப் மேலும் வலியுறுத்தினார்.
இதனிடையே, இந்தியாவுக்குத் தருவிக்கப்படும் ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 30,015 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது என்றும் இது கடந்த ஜூலையில் கிட்டத்தட்ட 28,000 கோடி ரூபாயாக இருந்தது என்றும் இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பு, அதிகப்படியான வரிவிதிப்பு ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல், ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்வதில் இந்தியா உறுதியாக உள்ளது.
இந்நிலையில், கடந்த மாதத்துக்கான ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான தரவுகள் தற்போது வெளியாகி உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்ய கச்சா எண்ணெய்யின் முன்னணி இறக்குமதியாளரான சீனாவுக்கும் இந்தியாவுக்குமான இடைவெளி மேலும் குறைந்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மட்டுமின்றி, நிலக்கரி, சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய் ரகங்களை இறக்குமதி செய்துள்ளது. மற்ற நாடுகள், இயற்கை எரிவாயு, குழாய் எரிவாயு உள்ளிட்ட பிற புதைபடிவ எரிபொருள்களை இறக்குமதி செய்துள்ளன.