புதுவை: பொதுத் தேர்வில் பாடப் புத்தகங்களைப் பார்த்து பதில்கள் எழுதுமாறு ஆசிரியர்கள் கூறியதாகப் புதுவையில் புகார் எழுந்துள்ளது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக்கோரி புதுவை மாநில கல்வித் துறை இயக்குநரிடம் தமிழ் உரிமை இயக்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
புதுவையில் சிபிஎஸ்இ பாடத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அண்மையில் அங்கு நடைபெற்ற மாதிரித்தேர்வில் பெரும்பாலான மாணவ, மாணவியர் தோல்வி அடைந்திருப்பதாகவும் அந்த இயக்கத்தினர் தெரிவித்தனர்.
எனவே, தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் விதமாக பொதுத் தேர்வில் மாணவர்கள் விதிகளை மீறி, பாடப்புத்தகங்களைப் பார்த்து பதில்கள் எழுத அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுபோன்ற செயல்களால் புதுவையின் கல்வித்தரம் பாதிக்கப்படும் என்றும் எனவே, சிபிஎஸ்இ பாட முறையை திரும்பப் பெறவும் பொதுத்தேர்வில் விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி தமிழ் உரிமை இயக்கத்தினர் கல்வித்துறை இயக்குநரிடம் மனு அளித்துள்ளனர்.
ஒரு வாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால் கல்வித் துறையை முடக்கும் வகையில், போராட்டம் நடத்தப்படும் என்றும் அந்த இயக்கத்தின் தலைவர் பாவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

