தோக்கியோ: தொழில்நுட்பத் துறையில் இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்து செயல்பட்டால், இந்த நூற்றாண்டின் தொழில்நுட்பப் புரட்சியை இவ்விரு நாடுகளும் வழிநடத்த முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியா, ஜப்பான் 15வது ஆண்டு உச்சநிலை மாநாடு தோக்கியோவில் நடைபெறுகிறது. இதையடுத்து, ஜப்பான் சென்ற மோடிக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜப்பான் குடிமக்கள் சிலர் காயத்ரி மந்திரம் கூறி, அவரை வரவேற்றனர். மேலும் சிலர், இந்தியப் பாரம்பரிய உடைகளை அணிந்தும், கதக், பரதநாட்டியம் ஆடியும் வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து நடைபெற்ற பொருளியல் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, உலக அளவில் வேகமாக வளர்ந்து வரும் பொருளியலாக இந்தியா வளர்ச்சி கண்டு வருகிறது என்றார்.
மிக விரைவில், உலகின் மூன்றாவது பெரிய பொருளியலாக இந்தியா உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
ஜப்பானின் அறிவாற்றலும் இந்தியாவின் திறமையும் இணையும் பட்சத்தில் மிகச் சிறந்த கூட்டாண்மையை (பங்காளித்துவத்தை) உருவாக்க முடியும் என்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் தொடர்பில் இந்தியா சவாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் திரு மோடி கூறினார்.
செயற்கை நுண்ணறிவு, பகுதி மின்கடத்தி, குவாண்டம் கணினி, உயிரி தொழில்நுட்பம், விண்வெளித்துறை ஆகியவற்றில் இந்தியா லட்சிய முயற்சிகளை முன்னெடுத்து வருவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
“ஜப்பானிய வணிகத்தைத் தெற்கு உலகிற்கு கொண்டு வருவதற்கு இந்தியா துணை நிற்கும். இந்தியாவும் ஜப்பானும் இணைந்து செயல்பட்டால், ஆசிய நாடுகளுக்கான இந்த நூற்றாண்டை நிலைத்தன்மை, வளர்ச்சி, செழிப்புக்கானதாக மாற்ற முடியும்.
“ஏற்கெனவே இந்தியாவும் ஜப்பானும் இணைந்து, ரோபோட்டிக்ஸ், கப்பல் கட்டுமானம், அணுசக்தி துறைகளில் வெற்றிகரமான பங்காளிகளாக செயல்பட்டு வெற்றிநடை போடுகின்றன,” என்றார் பிரதமர் மோடி. இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள், உலகிற்காக உற்பத்தி செய்யுங்கள் என்றும் அவர் ஜப்பான் தொழிலதிபர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஜப்பானை அடுத்து, சீனாவுக்குச் செல்லும் மோடி, அங்கு ஷாங்காய் மாநாட்டில் பங்கேற்கிறார்.