ஹைதராபாத்: டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் தெலுங்கானா மாநில முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா அண்மையில் நிபந்தனையுடன்கூடிய பிணையில் வெளியே வந்ததை விமர்சித்தது தொடர்பில் தற்போதைய முதல்வர் ரேவந்த் ரெட்டி நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளார்.
“இந்திய நீதித்துறை மீது எனக்கு மிகுந்த மரியாதையும் முழு நம்பிக்கையும் உள்ளது. ஆகஸ்ட் 29ஆம் தேதி சில பத்திரிகைகளில் நான் கூறியதாக வெளியான செய்திகள், நீதிமன்றத்தையும் நீதித்துறையின் ஞானத்தையும் நான் கேள்விக்குள்ளாக்குகிறேன் என்ற எண்ணம் ஏற்படும் வகையில் அமைந்துள்ளன என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று எக்ஸ் தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
தாம் நீதித்துறையின் செயல்பாட்டில் உறுதியான நம்பிக்கை கொண்டவர் என்று அவர் வலியுறுத்தினார்.
நீதித்துறை மீதும், அதன் சுதந்திரமான செயல்பாடு மீதும் தமக்கு மிகப் பெரிய மரியாதை உண்டு என்றார் அவர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும் அதன் நெறிமுறைகள் மீதும் தமக்கு உறுதியான நம்பிக்கை இருப்பதாகவும் நீதித்துறையை அதன் மிக உயர்ந்த மதிப்பாகக் கருதுவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, “நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது பாஜகவுடன் பி.ஆர்.எஸ். கட்சி ரகசியக் கூட்டணி வைத்துச் செயல்பட்டது என்று பல மேடைகளில் கூறினோம். திரு சந்திரசேகர ராவ் உட்படப் பலர் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். ஆனால் தற்போது கவிதா பிணையில் வெளியே வந்தது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.
“ஏனெனில், இதே வழக்கில் கைதுசெய்யப்பட்ட மணிஷ் சிசோடியாவிற்கு 15 மாதம் கழித்தே பிணை வழங்கப்பட்டது. ஆனால் கவிதாவிற்கு ஐந்தே மாதங்களில் நிபந்தனையுடன்கூடிய பிணை வழங்கப்பட்டுள்ளதே இதற்குச் சான்று,” என்று திரு. ரேவந்த் ரெட்டி கூறியிருந்தார்.
முதல்வரின் இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் கண்டித்தது.
“தங்களின் தனிப்பட்ட கருத்திற்குத் தேவையில்லாமல் நீதிமன்றத்தை இழுக்கவேண்டாம். நாங்கள் எப்படிச் சட்டமன்ற, நாடாளுமன்ற விவகாரங்களில் தலையிடாமல் உள்ளோமோ அதேபோல நீங்களும் நீதிமன்றம் தொடர்பான அம்சங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது,” என்று அது கூறியது.
தொடர்புடைய செய்திகள்
“இது பொறுப்புள்ள, முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் பேசும் பேச்சாக இல்லை. நாங்கள் தீர்ப்பு அளிக்கும்போது கட்சிகளை கேட்டுத்தான் தீர்ப்பளிக்க வேண்டுமா? நாங்கள் எங்கள் மனசாட்சிப்படியும் சட்டப்படியும்தான் தீர்ப்பளிக்கிறோம்” என்று நீதிபதிகள் பி.கே.மிஸ்ரா, கே.வி. விசுவநாதன் ஆகியோர் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, தெலுங்கானா முதல்வர் நிபந்தனையற்ற வருத்தம் தெரிவித்துள்ளார்.

