தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவர்களுடன் காற்பந்து விளையாடிய மாநில முதல்வர் (காணொளி)

1 mins read
093aaad2-652a-4aa5-94a8-7722fc7ba8c3
கல்லூரி மாணவர்களுடன் காற்பந்து விளையாடும் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி. - படம்: இந்திய ஊடகம்

ஹைதராபாத்: கடந்த சில வாரங்களாக நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையில் தீவிரம் காட்டிவந்த நிலையில், பரப்புரை ஓய்ந்ததும் கல்லூரி மாணவர்களுடன் காற்பந்து விளையாடி மகிழ்ந்தார், இந்தியாவின் தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி.

காற்பந்து ஆர்வலரான ரேவந்த் எண் 9, ‘இண்டியா’ என அச்சிடப்பட்ட சீருடையை அணிந்து காற்பந்து விளையாடினார். ‘இண்டியா’ என்பது இந்தியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியைக் குறிக்கிறது.

ஹைதராபாத் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்களுடன் அவர் காற்பந்து விளையாடிய காணொளி சமூக ஊடகங்களில் வலம் வருகிறது.

கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றதை அடுத்து, தெலுங்கானா மாநில முதல்வராகப் பொறுப்பேற்றார் 54 வயது ரேவந்த்.

முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு நெருக்கமானவராக அறியப்படும் ரேவந்த், பாஜக மாணவரணி, முன்னாள் முதல்வர் கே. சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிர சமிதி (முன்னர் தெலுங்கானா ராஷ்டிர சமிதி), முன்னாள் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஆகியவற்றிலும் இருந்துள்ளார்.

பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததைத் தொடர்ந்து, கடந்த 2021ஆம் ஆண்டு தெலுங்கானாவில் அக்கட்சியின் தலைவராக அவர் அறிவிக்கப்பட்டார்.

தெலுங்கானாவில் உள்ள 17 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு திங்கட்கிழமை (மே 13) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அங்கு 600க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்