ஹைதராபாத்: மின்சார வாகன விற்பனை, பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் பிரதமரின் ‘இ-டிரைவ்’ திட்டத்தின்கீழ் 1,085 புதிய மின்சாரப் பேருந்துகளைக் கொள்முதல் செய்ய உள்ளதாக தெலுங்கானா சாலைப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெலுங்கானா அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக ‘ஒலக்ட்ரா கிரீன் டெக்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மகேஷ் பாபு தெரிவித்தார்.
இதுகுறித்து செய்தியாளரிடம் பேசிய அவர், மத்திய அரசின் ‘இந்தியாவில் தயாரிப்போம்’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப உலகத்தரம் வாய்ந்த மின்சாரப் பேருந்துகளை உருவாக்க தங்கள் நிறுவனம் மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட காத்திருப்பதாக குறிப்பிட்டார்.
புதிய ஒப்பந்தம் மூலம் ஹைதராபாத் நகருக்குத் தூய்மையான, நவீன, நம்பகமான போக்குவரத்துச் சேவை வழங்கப்படும் என்றார் திரு மகேஷ்பாபு.
பல்வேறு இந்திய மாநிலங்கள் மின்சார வாகன உற்பத்தி, பயன்பாட்டுக்கு முன்னுரிமை அளித்து வருகின்றன. அந்த வகையில், தெலுங்கானாவிலும் போக்குவரத்துப் பயன்பாட்டில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது அம்மாநில அரசு.
இந்நிலையில், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் திறமை, நிலையான சேவையை வழங்க தெலுங்கானா மாநில போக்குவரத்துக் கழகத்துடன் இணைந்து செயல்பட காத்திருப்பதாக திரு மகேஷ் பாபு தெரிவித்தார்.
இந்நிறுவனம் தயாரிக்க உள்ள மின்சார பேருந்துகளில் பல்வேறு நவீன வசதிகள் இடம் பெற்று இருக்கும்.
ஒருமுறை மின்னோட்டம் செய்யப்பட்டால் 250 கிலோ மீட்டருக்கும் அதிகமான தூரம் செல்லும் உயர் திறன் கொண்ட பாட்டரிகள் இப்பேருந்தில் உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
45 நிமிடங்களில் மின்னூட்டம் செய்துவிடலாம். 12 மீட்டர் தாழ்தளக் கட்டமைப்புகளைக் கொண்டுள்ள ஓலக்ட்ரா மின்சார பேருந்துகள் இந்தியச் சாலைகளின் தரத்துக்கு ஏற்ப உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளன.
அதிக அதிர்வுகளை தாங்கக்கூடிய, நகர்ப்புற செயல்பாடுகளுக்கு ஏற்ப உருவாக்கப்படும் இந்த மின்சாரப் பேருந்துகள் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும் என்றும் திரு மகேஷ் பாபு கூறியுள்ளார்.
ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ஒலெக்ட்ரா கிரீன்டெக் லிமிடெட், இந்தியாவின் மின்சாரப் பேருந்துத் துறையில் தொடர்ந்து முதலிடத்தைப் பிடித்து வருவதாகவும் ஏற்கெனவே இந்தியா முழுவதும் 3,600க்கும் மேற்பட்ட ‘ஒலெட்ரா’ மின்சார வாகனங்கள் சேவையில் உள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்தது.

