திருநங்கைகளுக்குப் போக்குவரத்துக் காவல் பணி வழங்க தெலுங்கானா திட்டம்

1 mins read
7b5b6f5a-8640-44a4-bee0-6ab7d58de3b5
படம்: - ஊடகம்

ஹைதராபாத்: தெலுங்கானாவில் போக்குவரத்துக் காவலர்களுக்கு உதவியாக திருநங்கைகளைப் பணியமர்த்த அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கென்று தனிச் சீருடைகளைத் தயாரிக்கவும் அது முடிவு செய்துள்ளது.

ஒதுக்கப்பட்ட பிரிவினருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தின்கீழ் தெலுங்கானா அரசாங்கம் இந்தியாவின் முதல் திருநங்கைகள் சார்ந்த அரசு ஆட்சேர்ப்பு, சமூக நலத் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்தின்கீழ் திருநங்கைகளுக்குப் போக்குவரத்தை நிர்வகிக்க பயிற்சியளிக்கப்படும் எனக் கூறப்பட்டது.

இது தொடர்பாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்த திட்டத்தின்படி, திருநங்கைகள் அடையாளம் காணப்பட்டு பணியமர்த்தப்பட்டவுடன், அவர்கள்  ஹைதராபாத் போக்குவரத்துக் காவல்துறைக்கு உதவ சிறப்புப் பயிற்சி பெறுவார்கள்.

இது குறித்து தெலுங்கானா அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், திருநங்கைகளுக்கு ஏற்ற சீருடைகளை உருவாக்கும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாகவும் பணியமர்த்தப்பட்டவர்களுக்கு சமத்துவம், மரியாதை ஆகியவற்றை உறுதி செய்வதற்காகவும் சம்பளம்,சலுகைகள் உள்ளிட்ட வேலைவாய்ப்பு விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் சொன்னார்.

குறிப்புச் சொற்கள்