புகார்களுக்குத் தீர்வு காணாவிட்டால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை அபராதம்

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் நடவடிக்கை

புகார்களுக்குத் தீர்வு காணாவிட்டால் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரை அபராதம்

படம்: ஹிகிலா

04 Nov 2026 - 8:20 pm

1 mins read

புதுடெல்லி: வாடிக்கையாளர்களின் புகார்களை அலட்சியமாகக் கையாளும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்குக் காலாண்டுக்கு அதிகபட்சமாக 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜியோ, ஏர்டெல், வோடஃபோன் ஐடியா (VI) உள்ளிட்ட நிறுவனங்களின் சேவை குறித்த புகார்கள் அதிகரித்துவரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதலின்படி, 10,000க்கும் மேற்பட்ட சந்தாதாரர்களைக் கொண்ட நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கும் வாடிக்கையாளர் சேவை மையங்களை நடத்த வேண்டும். இதில் குறைந்தது 16 மணி நேரம் நேரடிப் பணியாளர்கள் சேவையில் இருக்க வேண்டும்.

கைப்பேசிச் செயலி, இணையத்தளம், மின்னஞ்சல் மூலம் புகாரளிக்கும் வசதி, மாற்றுத்திறனாளிகளுக்கான தனி உதவி மையங்கள், புகார்களைக் கண்காணிக்கும் நடைமுறைகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.

மேலும், புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான கால அவகாசம் 30 நாள்களில் இருந்து 15 நாள்களாகக் குறைக்கப்பட்டுள்ளது. எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 15 நாள்களுக்குள் வாடிக்கையாளருக்குத் தெரிவிக்க வேண்டும்.

இவ்விதிகளை மீறினால் முதல் புகாருக்கு 1,000 ரூபாயும், மேல்முறையீட்டிலும் தவறு தொடர்ந்தால் 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படும். ஒட்டுமொத்தமாக ஒரு காலாண்டிற்கு 20 லட்சம் ரூபாய் வரை அபராதம் வசூலிக்கப்படும்.

தீர்க்கப்பட்ட புகார்களின் எண்ணிக்கை, தீர்வு காண எடுத்துக்கொண்ட சராசரி நாள்கள் மற்றும் வாடிக்கையாளர் மதிப்பீடுகள் குறித்த விவரங்களையும் நிறுவனங்கள் வெளிப்படையாக அறிக்கையாக வெளியிட வேண்டும் என்று டிராய் உத்தரவிட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்