தெலுங்கானா: ஊழல் வழக்குகளில் சிக்கிய 70 அரசு ஊழியர்களுக்கு நீதிமன்றக் காவல்

தெலுங்கானா: ஊழல் வழக்குகளில் சிக்கிய 70 அரசு ஊழியர்களுக்கு நீதிமன்றக் காவல்

படம்: தெலுங்கானா டுடே

18 Nov 2026 - 5:47 pm

2 mins read

ஹைதராபாத்: தெலுங்கானாவில் ஊழல் வழக்குகளில் சிக்கி நீதிமன்றக் காவலில் உள்ள அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 70 ஆக உள்ளது.

தெலுங்கானா மாநிலம் தனியாக உருவானதிலிருந்து இதுவரை இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான அரசு ஊழியர்கள் ஊழல் வழக்குகளில் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரசு ஊழியர்கள் பணியின்போது லஞ்சம் வாங்குவதைத் தடுக்கும் நடவடிக்கைகளில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாகப் பிடிபடும் ஊழியர்கள் கைது செய்யப்படுகின்றனர். அதன்படி, பல கோடி ரூபாய் மதிப்பிலான ஊழல் வழக்குகளில் சிக்கிய அரசு ஊழியர்களின் எண்ணிக்கை 70 ஆகப் பதிவாகியுள்ளது. மாநிலம் உருவான காலத்திலிருந்து இதுவே மிக அதிக எண்ணிக்கையாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தனிநபர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட விசாரணைகளின் தொடர்ச்சியாக இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கைதானவர்களில் 34 பேர் ஹைதராபாத் நகரில் உள்ள சஞ்சலகுடா சிறையிலும், எஞ்சியவர்கள் கம்மம் மற்றும் கரீம்நகர் சிறைகளிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

காங்கிரஸ் அரசின் பதவிக்காலத்தில் ஊழலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்மீது இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் பிணை மனுக்களுக்கு லஞ்ச ஒழிப்புத் துறை கடுமையான எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் குறைந்தது 40 முதல் 60 நாள்கள் வரை நீதிமன்றக் காவலில் இருப்பார்கள் என்று அது தொடர்பான அறிக்கை குறிப்பிடுகிறது. எனினும், இவ்வழக்குகளில் தொடர்புடைய தனிநபர்களின் விவரங்கள், சொத்து மதிப்புகள் அல்லது வெவ்வேறு அரசுகளின் கீழ் பதிவான வழக்குகளின் எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

குறிப்புச் சொற்கள்