தெலுங்கானாவில் ரூ. 500 கொடுத்தால் ஒருநாள் சிறை ; ‘பிக் பாஸ்’ பாணியில் புதுஅனுபவம்

தெலுங்கானாவில் ரூ. 500 கொடுத்தால் ஒருநாள் சிறை ; ‘பிக் பாஸ்’ பாணியில் புதுஅனுபவம்

1 mins read
568c2ad5-d83c-4f07-9ebf-ca6dff8199f5
திரைப்படங்களில் இருப்பதுபோன்று இல்லாமல் உண்மையான சிறை அனுபவத்தை வழங்கும் புதுதிட்டம்.  - படம்: கெட்லோக்கல்

ஹைதராபாத்: வாரயிறுதியில் திரையரங்கு, கடைத்தொகுதி, உணவங்காடி நிலையங்கள் ஆகியவற்றை நோக்கி படையெடுக்கும் ஹைதராபாத் மக்களுக்குத் தற்போது புது அனுபவம் வழங்க புதிய திட்டம் ஒன்று தயாராகி வருகிறது.

சிறையில் ஒரு நாள் இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்ப்பவர்களுக்கு, அதை நேரிலேயே அனுபவிக்கும் வாய்ப்பை வழங்குகிறது அந்தப் புதிய திட்டம்.

ஹைதராபாத்தில் உள்ள சஞ்சல்குடா மத்திய சிறையில், “ சிறையை உணருங்கள்” (Feel the Jail) என்ற புதிய திட்டத்தைத் தெலுங்கானா சிறைத் துறை கொண்டு வருகிறது. அதன்படி, ரூ.500 செலுத்தினால், 24 மணி நேரம் (ஒருநாள்) சிறை வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

திரைப்படங்களில் இருப்பதுபோன்று இல்லாமல் உண்மையான சிறை அனுபவத்தை அது வழங்கும்.

கைதிகள் மாதிரி உடை தரப்படும். தரையில் படுக்க பாய், போர்வை கொடுக்கப்படும். காலை 5 மணிக்கே எழுந்து, உங்கள் சிறையறையை நீங்களே சுத்தம் செய்ய வேண்டும்.

அங்கு வழங்கப்படும் சாப்பாடுகூட சிறை உணவுகள்தான். உப்புமா, சாதம், பருப்பு, சாம்பார்/ரசம் போன்ற உணவுகள் மட்டுமே வழங்கப்படும்.

24 மணி நேரத்திற்குள் நீங்கள் சிறையைவிட்டு வெளியேற விரும்பினால், ரூ. 1000 அபராதமாகச் செலுத்த வேண்டும்.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கம் பொழுதுபோக்கு அல்ல. சுதந்திரத்தின் மதிப்பு என்ன, குற்றம் செய்தால் அதன் விளைவு எப்படி இருக்கும் எனப் பொதுமக்களுக்கு உணர்த்தவே இந்தத் திட்டம்.

குறிப்புச் சொற்கள்