ஹைதராபாத்: இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் கடைநிலை அரசு ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர்களின் மாத ஊதியம், ஐஏஎஸ் அதிகாரிகளின் ஊதியத்தைவிடக் கூடுதலாக இருப்பதாக அம்மாநில அரசின் நிதித்துறைச் செயலாளர் கே. ராமகிருஷ்ண ராவ் தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், தெலுங்கானா மாநிலம் உருவானபோது இருந்த ஊதியச் செலவினங்கள் தற்போது பல மடங்கு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டினார்.
“கடந்த 2014ஆம் ஆண்டில் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்பட்டபோது, அரசு ஊழியர்களுக்கான மாத ஊதியச் செலவு ரூ.1,500 கோடியாக இருந்தது. ஆனால், தற்போது அது ரூ.6,000 கோடியாக உயர்ந்துள்ளது,” என்று அவர் கூறினார்.
அரசுத் துறைகளில் நீண்டகாலமாகப் பணியாற்றி வரும் சில துப்புரவுப் பணியாளர்கள் தற்போது மாதம் 2 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக ஊதியம் பெறுவதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், மின்சார வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஓட்டுநர்கள் மாதம் 1 லட்சம் ரூபாய்க்குமேல் ஊதியம் ஈட்டுகின்றனர்.
“மின்சார வாரியத்தின் தலைமைப் பொறியாளர்கள் மாதம் 7 லட்சம் ரூபாய் வரை ஊதியம் பெறுகின்றனர். இது மாநில ஆளுநர் அல்லது தலைமைச் செயலாளரின் ஊதியத்தைவிட மிக அதிகம்,” என்று ராமகிருஷ்ண ராவ் விளக்கினார்.
அரசுப் பணிக்குக் கடும் போட்டி
அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் சலுகைகள் தனியார் துறையைவிடக் கவர்ச்சிகரமாக இருப்பதால் காலிப் பணியிடங்களுக்குப் பேரளவில் போட்டி நிலவுகிறது.
“அண்மையில் அறிவிக்கப்பட்ட 563 குரூப்-1 பணியிடங்களுக்கு மட்டும் 4.5 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளனர். அதாவது, ஒரு பணியிடத்திற்கு ஏறக்குறைய 800 பேர் போட்டியிடுகின்றனர்,” என்று அவர் தெரிவித்தார்.
முன்பு கல்வி மற்றும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே அதிக ஊதியம் என்ற நிலை இருந்தது. ஆனால், இப்போது முறையான ஊதியக் குழு பரிந்துரைகள் மற்றும் நீண்டகாலப் பணிமூப்பு காரணமாக, கடைநிலை ஊழியர்களும் கௌரவமான மற்றும் உயர்நிலை அதிகாரிகளுக்கு இணையான ஊதியத்தைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்
அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்திற்காக மாநில அரசு தனது வருவாயில் பெரும்பகுதியைச் செலவிட வேண்டியுள்ளதாக திரு ராவ் குறிப்பிட்டார்.
ஒருபுறம் ஊழியர்களின் வாழ்வாதாரம் சிறப்பாக இருந்தாலும், மறுபுறம் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியை ஒதுக்குவதில் இது சவால்களை ஏற்படுத்தக்கூடும் என பொருளியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த பத்தாண்டுகளில் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்துள்ள வேளையில், இத்தகைய ஊதிய உயர்வுகள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன.

