கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் சட்டவிரோதக் குடியேறிகளை அடைத்து வைக்க சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, சுவேந்து அதிகாரி முதல்வராகப் பதவியேற்றார்.
அதையடுத்து, அவரது தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அதன் ஓர் அங்கமாக, அம்மாநிலத்தில் சட்டவிரோதக் குடியேறிகளை அடைத்து வைக்க மாவட்டந்தோறும் மையங்களை அமைப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியா்களுக்கு மேற்கு வங்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதக் குடியேறிகளை அவா்களது தாய்நாட்டுக்கு அனுப்பும் வரை அவர்கள் அம்மையங்களில் தற்காலிகமாகத் தங்கவைக்கப்படுவர் என்று அரசுத் தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் எல்லைப் பகுதி வழியே ரோஹிங்யாக்கள், பங்ளாதேஷில் இருந்து அந்நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் இந்தியாவுக்குள் ஊடுருவுகிறார்கள்.
சட்டவிரோதக் குடியேறிகளை நாட்டைவிட்டு வெளியேற்ற பல்வேறு நடவடிக்கைகளை இந்திய உள்துறை அமைச்சு மேற்கொண்டுள்ளது.
இதற்காகக் கொண்டுவரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) கடும் எதிர்ப்பு கிளம்பிய போதிலும், கடந்த ஆண்டு மே மாதம் சட்டவிரோதக் குடியேறிகள் தொடர்பாக இந்திய உள்துறை அமைச்சு சில அறிவுறுத்தல்களை வெளியிட்டது. அவற்றைப் பின்பற்றி, சட்டவிரோதக் குடியேறிகளுக்கான மையங்கள் அமைக்கப்படுவதாக முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சட்டமன்றத் தோ்தலில் வென்று ஆட்சியமைத்தால் சட்டவிரோதக் குடியேறிகளை மாநிலத்தில் இருந்து வெளியேற்றுவோம் என பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.

