புதுடெல்லி: வடஇந்தியாவிலுள்ள யமுனை ஆற்றில் படகு கவிழ்ந்ததில் பத்துப் பேர் மாண்டதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுரா நகரில் வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 10) அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
பத்து உடல்கள் மீட்கப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி சைலேஷ் குமார் பாண்டே ஊடகங்களிடம் கூறினார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த அந்தப் படகு 27 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிக்கொண்டு யமுனை ஆற்றில் சென்றுகொண்டிருந்தது.
ஆழமான பகுதியைக் கடந்தபோது மிதவைப் பாலம் ஒன்றின்மீது மோதியதும் படகு ஆற்றில் கவிழ்ந்தது. நீருக்குள் விழுந்த அனைவரும் தத்தளித்தனர். இருப்பினும், ஆழமான பகுதி என்பதால் நீருக்குள் மூழ்கி பலர் உயிரிழந்தனர். மேலும் பலரைக் காணவில்லை. அவர்களின் எண்ணிக்கையை அதிகாரிகளால் உறுதிப்படுத்த இயலவில்லை.
மாயமானவர்களை மீட்க தீயணைப்புத் துறையைச் சேர்ந்தோரும் முக்குளிப்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டனர். தேடி, மீட்கும் பணியில் தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் ஈடுபட்டனர். வெள்ளிக்கிழமை இரவு எஞ்சிய 17 பேரும் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அண்மையில், நீர்மட்டம் உயர்ந்ததன் காரணமாக ஆற்றிலிருந்து மிதவைப் பாலம் ஒன்று அகற்றப்பட்டது. அப்போது எஞ்சிய பாலத்தின் உருளைகள் ஆற்றில் மிதந்துள்ளன. அந்த உருளைகளில் ஒன்றின்மீது படகு மோதியிருக்கலாம் என நம்பப்படுகிறது.
உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, காயமுற்றோர் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகக் கூறினார்.
அனுமதிக்கப்படும் அளவுக்கு மீறி அதிகமானோரை ஏற்றிச் செல்வது, பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்காமல் புறக்கணிப்பது போன்ற காரணங்களால் இந்தியாவில் படகு விபத்துகள் நிகழ்வது வழக்கமாகிவிட்டது. படகு கவிழ்ந்து விபத்து ஏற்படும்போது உயிர்காப்புக் கவசங்களை பெரும்பாலான படகுகள் வைத்திராததால் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
2024ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் படகு மூழ்கியதில் 13 குழந்தைகள் உட்பட 15 பேர் உயிரிழந்தனர். பள்ளிச் சுற்றுலாவின் ஒரு பகுதியாகப் படகு சவாரி மேற்கொண்டபோது அந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்ததாக ஏஎஃப்பி செய்தி குறிப்பிட்டது.


