தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெலுங்கானா ஆலை வெடி விபத்தில் பத்துப் பேர் பலி; பலர் படுகாயம்

2 mins read
bcf42285-9bb3-4bcf-831e-2ed5eedf92aa
இந்த விபத்தில் தொழிற்சாலையின் சில பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன. எனவே, மாண்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. - படம்: ஊடகம்
multi-img1 of 2

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத் தலைநகர் ஹைதராபாத் அருகேயுள்ள ஆலையில் ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 12 பேர் மாண்டுபோயினர்.

இருபத்துக்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தின்போது உருவான வெடிச்சத்தம் வெகுதூரம் வரை கேட்டது. அச்சமயம் கட்டடங்கள் குலுங்கியதாக ஆலைக்கு அருகே குடியிருப்பவர்கள் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் தொழிற்சாலையின் சில பகுதிகள் முற்றிலும் சேதமடைந்தன. எனவே, மாண்டோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்திய நேரப்படி திங்கட்கிழமை (ஜூன் 30) காலை 9.37 மணியளவில், விபத்து குறித்த தகவல் கிடைத்ததாகவும் அதையடுத்து, 11 தீயணைப்பு வாகனங்கள் விபத்து பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீயணைப்பு, மீட்புப்பணிகளில் இரண்டு இயந்திர மனிதர்கள், பேரிடர் மீட்புக்குழுவினர், தீயணைப்பு வீரர்கள் என பலர் ஈடுபட்டனர்.

விபத்து நிகழ்ந்த சங்கரெட்டி, பாஷமைலாரம் பகுதிகளில் அவ்வப்போது இதுபோன்ற ஆலை விபத்துகள் நிகழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் வருத்தத்துடன் தெரிவித்தனர்.

கடந்த 2023ஆம் ஆண்டு, பாஷமைலாரம் பகுதியில் இயங்கி வந்த வேதி ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று பேர் பலியாகிவிட்டனர்.

அதேபோல் சங்கரெட்டியில் உள்ள மருந்து உற்பத்தி ஆலையில் நிகழ்ந்த விபத்தில் ஆறு பேர் மாண்டுபோயினர்.

திங்கட்கிழமை (ஜூன் 300 மாலை வரை, உயிரிழந்த ஐந்து பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.

படுகாயம் அடைந்தவர்களில் 11 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர்களுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களுடைய குடும்பத்தாருக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளார். காயம் அடைந்தோருக்கு ரூ.50,000 நிவாரணம் அறிவிக்கப்ப்டுள்ளது.

இந்த விபத்து தொடர்பாக இரங்கல் தெரிவித்துள்ள தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, அனைத்து மீட்பு, நிவாரணப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என அம்மாநில அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்