இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆர்க்கிட் மலர்கள் அழிவிலிருந்து மீட்பு

இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான ஆர்க்கிட் மலர்கள் அழிவிலிருந்து மீட்பு

கோப்புப் படம்: மோங்காபே

10 Nov 2026 - 7:40 pm

2 mins read

திருவனந்தபுரம்: தென்னிந்தியாவில் சாலை அமைக்கும் திட்டங்களுக்காக அழிக்கப்படவிருந்த பல்லாயிரக்கணக்கான ஆர்க்கிட்ச் செடிகளை மீட்கும் அவசர முயற்சி வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அண்மைய ஆய்வொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆர்க்கிட் வகைகள் ஒட்டுண்ணித்தாவரங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது இவை பிற மரங்களை வெறும் பிடிமான ஆதாரமாகப் பயன்படுத்தி அவற்றின் மீது வளர்கின்றன. ஆதார மரங்கள் வெட்டப்படும்போது, அவற்றுடன் சேர்ந்து ஆர்க்கிட் செடிகளும் அழிய நேரிடும்.

கேரள மாநிலத்தில், சாலை மேம்பாட்டுக்காக ஏற்கெனவே வெட்டப்பட்ட அல்லது வெட்டப்படவிருந்த மரங்களிலிருந்து கிட்டத்தட்ட 27,000க்கும் மேற்பட்ட ஆர்க்கிட்களை ஆய்வாளர்கள் சேகரித்தனர். மீட்கப்பட்ட அந்த ஆர்க்கிட்கள் பின்னர் இரண்டு பொது ஈரநிலங்கள், ஒரு கடற்கரையில் உள்ள மரங்களில் நடப்பட்டன.

ஏறக்குறைய ஈராண்டுகளுக்குப் பிறகு அந்த ஆர்க்கிட் செடிகளில் கிட்டத்தட்ட முக்கால்வாசி இன்னும் உயிருடன் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மீட்கப்பட்டவற்றில், அந்த வட்டாரத்துக்கே உரிய 12 தனித்துவமான ஆர்க்கிட் இனங்களும் அடங்கும். அந்த 12ல் 11 இனங்கள் அனைத்துலக இயற்கை பாதுகாப்புச் சங்கத்தின் சிவப்புப் பட்டியலில்கூட இடம்பெறவில்லை. அதாவது அவற்றின் பாதுகாப்பு நிலை இன்னும் அறியப்படவில்லை.

“இந்த ஆர்க்கிட்களில் சில அமைதியாக அழிந்து வரும் நிலை காணப்படுகிறது,“ என்று இங்கிலாந்தின் தாவரவியல் பூங்காவைச் சேர்ந்தவரும் ஆய்வின் இணை ஆசிரியருமான ஆர்க்கிட் பாதுகாப்பு நிபுணர் விஸ்வாம்பரன் சரசன் காணொளி வழியாக மோங்காபே செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

கேரள மாநிலம், ஆர்க்கிட்களின் முக்கிய வாழ்விடமாக விளங்குவதோடு 271 அறியப்பட்ட இனங்களைக் கொண்டுள்ளது. பல்லுயிர் வளம் மிக்க மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலுள்ள காடுகள், சாலையோரங்கள், தேயிலை-காபி தோட்டங்களில் உள்ள மரங்களில் இவற்றில் பெரும்பாலானவை வளர்கின்றன.

குறிப்புச் சொற்கள்